தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவையை வடக்கு மக்கள் குருநாகலையில் பெற்றலாமாம்! பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு
தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவையை வவுனியாவில் ஆரம்பிக்க பௌதீக வளம் கிடையாது. இந்த ஆண்டு இறுதி பகுதியில் குருநாகல் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை விநியோகம் ஆரம்பிக்கப்படும். வடக்கு மாகாணத்தில் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் வரை வடக்கு மாகாண மக்கள் குருநாகல் மாவட்டத்தில் ஒருநாள் சேவையை பெற்றுக்கொள்ளலாம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளைக்கான கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –
ஒருநாள் சேவை ஊடாகத் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கு வடக்கு மாகாணத்தில் இருந்து 25 சதவீதமானோர் வருகை தரவில்லை. 5 சதவீதத்துக்கும் அதிகமானோர் மாத்திரமே வருகை தருகின்றனர். நிறைவடைந்த 06 மாத காலப்பகுதியில் தேசிய ஆட்பதிவு திணைக்களத்தில் ஒருநாள் சேவை ஊடாக அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கு 112,596 விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்துள்ளார்கள். இவற்றில் 4,968 விண்ணப்பங்கள் வடக்கு மாகாணத்தை சேர்ந்தவை.
வடக்கு மாகாணத்தில் வவுனியா பிரதேச செயலகத்தில் தேசிய அடையாள அட்டை விநியோக பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒருநாள் சேவையை வவுனியாவில் ஆரம்பிக்க பௌதீக வளங்கள் அங்கு கிடையாது. வடக்கு மாகாணத்தில் ஒரு பிரதேசத்தில் ஒருநாள் சேவை விநியோகத்தை ஆரம்பிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதி பகுதியில் குருநாகல் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை விநியோகம் ஆரம்பிக்கப்படும். வடக்கு மாகாணத்தில் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் வரை வடக்கு மாகாண மக்கள் குருநாகல் மாவட்டத்துக்கு வருகை தந்து அந்த சேவையை பெற்றுக்கொள்ளலாம். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை