நால்வர் தீர்மானங்களால் நாடு வங்குரோத்தானது! சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டு
2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் மத்திய வங்கி எடுத்த தீர்மானங்களின் விளைவை நாட்டு மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ளார்கள். பொருளாதாரப் பாதிப்புக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் எவ்வாறு முன்னேற்றமடைவது.
மூன்று அல்லது நான்கு பேர் எடுத்த தவறான தீர்மானங்களால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே பொருளாதாரப் பாதிப்புக்கு நீதி வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற உத்தேச மத்திய வங்கி சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –
உத்தேச மத்திய வங்கி சட்டமூலத்தின் ஒருசில ஏற்பாடுகள் பாரதுரமானவை. ஆகவே, சட்டமூலம் தொடர்பில் விரிவான பேச்சு முன்னெடுக்கப்பட வேண்டும். பொருளாதாரப் பாதிப்புக்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல்வாதிகள் பொறுப்புக் கூற வேண்டும் என ஒரு தரப்பினரும், அரச அதிகாரிகள் பொறுப்புக் கூற வேண்டும் என பிறிதொரு தரப்பினரும் குறிப்பிடுகிறார்கள்.
நிதி வங்குரோத்து தொடர்பில் தற்போது மாறுபட்ட பல கருத்துகள் குறிப்பிடப்படுகின்றன. நாட்டின் நிதி நிலைமை ஸ்திரத்தன்மையில் இல்லை. ஆகவே அரசமுறை கடன்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்ற யோசனையை 2016 ஆம் ஆண்டு அமைச்சரவையில் முன்வைத்தேன். 4 சதவீதமாகக் காணப்பட்ட வணிக கடன் 45 சதவீதமாக உயர்வடைந்துள்ளதால் நாடு வங்குரோத்து நிலையடையும் என்பதை அப்போது சுட்டிக்காட்டினேன்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பொருளாதார வளர்ச்சி வீதம் 3 சதவீதமாகக் காணப்பட்டது. வணிக கடன் 12.5 சதவீதமாக உயர்வடைந்தது. அதனால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்று குறிப்பிடுவது பொருளாதார ரீதியில் ஏற்புடையதல்ல.
2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்தால் 2020 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் 350 பில்லியன் ரூபாவை அரசாங்கம் இழக்க நேரிடும். ஒவ்வொரு பிரஜையும் ஏதாவதொரு வழிமுறையில் 350,000 ரூபாவை இழப்பார்கள் இதுவே உண்மை.
நல்லாட்சி அரசாங்கம் பெற்றுக்கொண்ட வணிகக் கடன்களில் 7.2 பில்லியன் டொலர் 2019 ஆம் ஆண்டு மிகுதியானது. ரூபாவின் பெறுமதியை 198 ரூபாவாகத் தக்கவைத்துக் கொள்ள மத்திய வங்கி 5.5 பில்லியன் டொலரை செலவழித்தார்கள். மத்திய வங்கி தனது பொறுப்பை நிறைவேற்றுவதற்காக எடுத்த தீர்மானத்தின் விளைவை நாட்டு மக்கள் இன்று எதிர்கொள்கிறார்கள்.
வைத்தியசாலைகளில் பலர் உயிரிழக்கிறார்கள். மந்த போசனை தீவிரமடைந்துள்ளது. எதிர்காலத்தில் அறிவற்ற மனித சமுதாயம் தோற்றம் பெறும். இவ்வாறான நிலையில் எதிர்வரும் தசாப்தங்களுக்கு எவருக்கும் எதிர்காலம் என்பதொன்று கிடையாது. இதற்கு கடந்த அரசாங்கத்தின் மத்திய வங்கியை இயக்கியவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.
2020.03.07 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியம் ‘இலங்கையின் கடன் நிலை ஸ்திரமான நிலையில் இல்லை. ஆகவே வெகுவிரைவில் நாடு வங்குரோத்து நிலையடையும்’ என மத்திய வங்கி ஆளுநர், நாணய சபை மற்றும் அப்போதைய ஜனாதிபதிக்கும் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. ஆனால் இந்த விடயத்தை மறைத்து அவர்கள் நாடாளுமன்றத்துக்கு வந்து போலி கதைகளை மாத்திரம் குறிப்பிட்டு முழு நாடாளுமன்றத்தையும் தவறான வழி நடத்தினார்கள்.
தேவையான அளவு டொலர் உள்ளது. எரிபொருள் உள்ளது. மருந்து உள்ளது என்றார்கள். இறுதியில் நேர்த்தில் நடந்ததை முழு நாடும் அறிந்தது. பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்புக் கூறாமல் இருந்தால் இன்னும் 10 வருடங்களுக்கு பின்னர் நாடு மீண்டும் வங்குரோத்து நிலை அடையும். வங்குரோத்து நிலையடைந்த ஆஜன்டினா இதுவரை முன்னேறவில்லை. 12 ஆண்டுகளுக்கு பின்னர் கிறீஸ் தற்போது முன்னேற்றமடைந்துள்ளது. லெபனான் சற்று முன்னேற்றமடைந்துள்ளது.
வங்குரோத்து நிலை அடைந்த ஐஸ்லாந்து நாடு குறுகிய காலத்துக்குள் முன்னேற்றமடைந்துள்ளது.நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய பிரதான மூன்று வங்கிகளின் ஆளுநர்களை சிறைக்கு அனுப்பி ஐஸ்லாந்து வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டெழும் செயற்பாடுகளை ஆரம்பித்தது.
இருப்பினும் இலங்கையில் பல லட்ச மக்களை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய மத்திய வங்கியின் ஆளுநர், நாணய, முன்னாள் நிதியமைச்சர், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோருக்கு எவ்வித பொறுப்புக்கூறலும் இல்லை, அவர்கள் மீதான அழுத்தம் ஏதும் இல்லை.
மூன்று, நான்கு பேர் சேர்ந்து எடுத்த தீர்மானங்களால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே, பொருளாதார பாதிப்புக்கான நியாயம் வேண்டும்.ஒரு சிலர் எடுத்த தீர்மானங்களால் 225 உறுப்பினர்களும்,அரச அதிகாரிகளும் விமர்சனத்துக்குள்ளாக வேண்டிய தேவையில்லை. இந்த சட்டமூலத்தில் வரையறையற்ற நாணய அச்சிடலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. – என்றார்.
கருத்துக்களேதுமில்லை