உலக சுகாதார ஸ்தாபனப் பிரதிநிதிகள் கெஹலியவின் கருத்தை பொய்யாக்கினர் காவிந்த போட்டுத் தாக்கு
அன்பளிப்பாக கிடைத்த மருந்து பொருள்களில் 700 மருந்து பொருள்கள் பதிவு செய்யப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சபையில் குறிப்பிட்ட கருத்தை உலக சுகாதாரத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் மறுத்துள்ளனர்.
சுகாதாரத்துறை அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவோம். தற்துணிவு உள்ளவர்கள் நாட்டுக்காக பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வங்கித்தொழில் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –
உலக சுகாதார தாபனத்தின் ஊடாக அன்பளிப்பாக கிடைத்த 700 மருந்துப் பொருள்கள் பதிவு செய்யப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
இந்த விடயம் தொடர்பில் கொழும்பில் உள்ள உலக சுகாதார தாபனத்தின் பிரதிநிதிகளிடம் வினவினோம்.’எக்காரணிக்காகவும், எந்த நாட்டுக்கும் சட்டத்துக்கு முரண்பாக பதிவு செய்யப்படாத மருந்துகளை அன்பளிப்பாக அல்லது விற்பனைக்காக வழங்குவதில்லை என உலக சுகாதார தாபனத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டார்கள்.
உலக சுகாதார தாபனம் வழங்கிய மருந்துப் பொருள்கள் தொடர்பில் சுகாதாரத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்துக்கு பொய்யுரைத்து,நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளார்.
நாட்டில் சுகாதாரத்துறையில் பாரிய பிரச்சினை உள்ளது என்பதை ஏன் சுகாதாரத்துறை அமைச்சர் உட்பட சுகாதாரத்துறை அமைச்சின் அதிகாரிகள் ஏற்றுக்கொள்வதில்லை.
சுகாதாரத்துறை அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவோம் தற்துணிவு உள்ளவர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கலாம்.
நாட்டு மக்கள் ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஆகவே, தவறான செயற்பாடுகளுக்கு துணைசெல்வதில்லை என்பதை எடுத்துரைக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை