13 ஆவது திருத்தத்தை மீறும் உரிமை ஜனாதிபதி ரணிலுக்குக் கிடையாதாம்! செல்வம் எம்.பி. நாடாளுமன்றில் இடித்துரைப்பு
அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் சட்ட ரீதியாக அரசமைப்பில் உள்ள ஒரு விசேட திருத்தம். இந்த அரசியல் சாசனத்தை மீற ஜனாதிபதிக்குக்கூட தார்மீக உரிமை இல்லை.
13 ஆவது அரசமைப்பு திருத்த விடயத்தில் இந்தியா தொடர்புபட்டுள்ளது என்ற அடிப்படையில் அது தொடர்பில் இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்காலநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வங்கித்தொழில் விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –
இந்தியாவுக்கு செல்ல முன்னர் எம்மை அழைத்து பேசிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை தரமுடியாது என்று கூறினார்.
அவருக்கு ஒன்றைத் தெளிவாகக் கூற விரும்புகின்றோம். நாங்கள் கோரும் தீர்வு சமஷ்டி அடிப்படையிலானது. அதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம்.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் சட்ட ரீதியாக அரசமைப்பில் உள்ள ஒரு விசேட திருத்தம். இந்த அரசியல் சாசனத்தை மீற ஜனாதிபதிக்குக் கூடத் தார்மீக உரிமை இல்லை.
13 ஆவது அரசமைப்பு திருத்த விடயத்தில் இந்தியா தொடர்புப்பட்டுள்ளது என்ற அடிப்படையிலேயே அது தொடர்பில் ஓர் அழுத்தத்தை இலங்கைக்கு கொடுக்க வேண்டுமென நாம் கோரி வருகின்றோம்.
இலங்கை அரசு உட்பட இலங்கை ஜனாதிபதி இந்த அரசியல் சாசனத்தை மீறுகின்ற பாதக செயலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
சட்டத்தை மீறுகின்ற தலைவர்களாக இவர்கள் இருக்கின்ற நிலையில் ஏனைய சாதாரண மக்கள் சட்டத்தை எப்படி மதிப்பார்கள் எனக் குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை