பல்கலை மாணவர்களை தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கின்றமை எதற்கு? வாசுதேவ கேள்வி
பகிடிவதைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களைத் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘இந்நாட்டின் அரசியல் மாற்றமொன்று நிகழ வேண்டும் என்று வலியுறுத்தி, பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ச்சியாக பேரணிகளை நடத்தினார்கள்.
இந்த நிலையில், களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர், மற்றும் செயற்பாட்டாளர் ஆகியோர் 200 நாட்களாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
பகிடிவதைச் சட்டத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவமானது பகிடிவதையுடன் தொடர்புடையது அல்ல என்று பல்கலைக்கழக நிர்வாக சபையே தெரிவித்துள்ளது.
மேலும், இது மாணவர் ஒன்றிய விவகாரம் தொடர்பாக இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை வழங்கப்பட்டுள்ள போதிலும், அந்த மாணவர்களைப் பகிடிவதை சட்டத்தின் கீழ் கைது செய்து தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைத்துள்ளார்கள்.
இவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுடனும், பாதாள குழு உறுப்பினர்களுடனும்தான் சிறையில் உள்ளார்கள்.
இவர்களுக்கு ஏன் இன்னமும் பிணை வழங்கப்படாமல் உள்ளது? – என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை