மலையக மக்களின் கல்வி, சுகாதார அபிவிருத்திக்கு இந்திய பிரதமரால் 300 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு! அமைச்சர் ஜீவன் தொண்டமான் தகவல்
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் மேம்பாட்டுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வழங்கவுள்ள 300 கோடி ரூபா கல்வி மற்றும் சுகாதாரத்துறை அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும். இதில் மலையகத்துக்கான பல்கலைக்கழக திட்டமும் உள்ளடங்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இரு நாள்கள் இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு வெள்ளிக்கிழமை இரவு நாடு திரும்பிய அமைச்சர் ஜீவன் தொண்டமான், கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்தியா சென்றிருந்தோம். மலையக மக்களின் பிரச்சினைகள், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம், எரிசக்தி மற்றும் மின்சக்தி துறைக்கான முதலீடுகள் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகக் கலந்துரையாடப்பட்டன. இவை தொடர்பில் சாதகமான பதில்கள் கிடைத்துள்ளன.
இதில் குறிப்பாக மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசும்போது, வீடுகளை நிர்மாணிப்பதால் மாத்திரம் பிரச்சினை தீராது, வீடுகள் அமைக்கப்பட்ட பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தை – வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும். அதற்கு கல்வியே சிறந்த தேர்வாக அமையும் என சுட்டிக்காட்டியிருந்தேன்.
மலையக பெருந்தோட்ட சமூகத்தின் மேம்பாட்டுக்காக 300 கோடி ரூபா வழங்கப்படும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரத் துறைக்கு அந்நிதி பயன்படுத்தப்படும்.
இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையிலான அரச அங்கீகாரத்துடனான தேசிய விழா நவம்பரில் நடத்தப்படவுள்ளது.
இந்நிகழ்வுக்கு இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிறப்பு தூதுவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கின்றேன்.
அதேவேளை, எதிர்வரும் 26 ஆம் திகதி சர்வக்கட்சி கூட்டத்தை ஜனாதிபதி கூட்டியுள்ளார். இதன்போது 13 தொடர்பான ஆவணம் முன்வைக்கப்பட்டு முடிவெடுக்கப்படும். ஆக மொத்தத்தில் இந்திய விஜயம் வெற்றிகரமாக அமைந்தது. – என்றார்
கருத்துக்களேதுமில்லை