இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்களுக்காக பணியாற்றும்! கட்சியின் 84 ஆவது ஆண்டில் செந்தில் உத்தரவாதம்
அபு அலா –
அமரர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் ஆசியுடன் அவர்களது பாதையில் பயணித்து மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சமரசமின்றி தொடர்ந்து பணியாற்றும் என இ.தொ.காவின் 84 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு –
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 84 வருடங்களைப் பூர்த்தி செய்து 85 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்து, மலையகத்துக்காக பாரிய சேவைகளை செய்துள்ளது. பிரஜா உரிமையற்ற சமூகமாக இருந்த மலையக மக்களுக்கு பிரஜா உரிமையை பெற்றுக்கொடுத்த அதேவேளை அம்மக்களுக்கு சம உரிமை மற்றும் உரிமைகள், அபிவிருத்தி போன்ற பல விடயங்களை மலையகத்தில் முன்னெடுத்ததுடன் எண்ணிலடங்காத பல சேவைகளை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் செய்துள்ளது.
மேலும், ஆண், பெண் இருபாலாருக்கும் சமமான சம்பளம், தோட்டப்புறங்களுக்கான அபிவிருத்தி, பாடசாலை மற்றும் வைத்தியசாலைகள் நிர்மாணிக்கப்பட்டமை, ஆசிரியர் நியமனங்களை பெற்றுக்கொடுத்தமை என இ.தொ.கா. மலையக மக்களுக்கு பரந்துபட்ட சேவையையும் ஆற்றியுள்ளது.
1987 ஆம் ஆண்டு முதல் முதலில் மலையகத்தில் தனிவீடுகள் அமைக்கும் பணியை இ.தொ.கா. ஆரம்பித்து வைத்ததுடன், கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்திகளையும் முன்னெடுத்துள்ளது.
இந்த வேலைத்திட்டங்கள் மலையகத்தில் முழுமையாக வெற்றியடைய இ.தொ.கா. தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றும் என்றும் தேசிய நீரோட்டத்தில் மலையக மக்களையும் இணைத்து முழுமையான அபிவிருத்தியுடன் முன்னோக்கி கொண்டு செல்ல அமரரர்களான சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா, ஆறுமுகன் தொண்டமான் ஐயா ஆகியோர் பாடுபட்டதை குறிப்பிட்டாக வேண்டும்.
அவர்கள் அன்று காட்டிய வழியில் இ.தொ.கா. என்றுமே முன்னின்று செயற்படும் என இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை