97 உயர்தரக் கலைப்பிரிவு மாணவர்களால் ஸ்கந்தவரோதயவுக்கு சைக்கிள் தரிப்பிடம்!

சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் 1997 ஆம் ஆண்டில் உயர்தரம் கல்விகற்ற கலைப்பிரிவு மாணவர்களால் தமது அணியினரின்
ஞாபகார்த்தமாக சைக்கிள் தரிப்பிடம் ஒன்று அமைக்கப்பட்டு இன்று (திங்கட்கிழமை) காலை அவர்களின் வகுப்பாசிரியர் கலாநிதி ஆறு.திருமுருகனால் திறந்துவைக்கப்பட்டது.

ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் முதல்வர் லயன் மு.செல்வஸ்தானின்
கோரிக்கைக்கு அமைவாக 1997 ஆம் ஆண்டு கலைப்பிரிவு மாணவர்களால் 24 லட்சம் ரூபா பெறுமதியில் மாணவர்களுக்கான இந்த சைக்கிள் தரிப்பிடம் அமைக்கப்பட்டது.

ஸ்கந்தாவின் வரலாற்றில் 1997 ஆம் ஆண்டு அணியினர் 24 மாணவர்கள் யாழ்.பல்கலைக்கழகத்துக்கு மட்டும் தெரிவாகி கல்லூரிக்கு சாதனையை ஏற்படுத்திக் கொடுத்தனர். அதேவேளை, சப்ரகமுவ, ரஜரட்டை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியியற்கல்லூரிகளுக்கும் இராமநாதன் நுண்கலைப் பீடம் என ஏராளமான மாணவர்கள் தெரிவாகியிருந்தனர் என்று 1997 ஆம் ஆண்டு கலைப்பிரிவு தொடர்பான சாதனை விவரங்களை அதிபர் மு.செல்வஸ்தானும் பிரதம விருந்தினராக வருகைதந்த அந்த அணியின் வகுப்பாசிரியர் கலாநிதி ஆறு.திருமுருகனும் நினைவுகூர்ந்து பாராட்டி உரையாற்றினர்.

பொருனாதாரத் தடை வடக்கு மாகாணத்துக்கு விதிக்கப்பட்ட சூழலில் மண்ணெண்ணெய் குப்பி விளக்கில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தாம் கல்விகற்று கல்லூரிக்குப் பெருமைதேடிக்கொடுத்த சாதனைகள் தொடர்பாகவும், கலாநிதி ஆறு.திருமுருகனின் அன்புகலந்த கண்டிப்பான கற்பித்தல் தமக்கு வழிகாட்டியாக ஆற்றுப்படுத்தி சான்றோர்களாக தமது அணியிலுள்ளவர்களை உயர்த்தின என்றும் யுத்தம் உக்கிரமடைந்த காலத்தில் கல்வியை தளர்விலாது பெற்றுக்கொண்ட அந்த பசுமையான நினைவுகளை ம.ரவிபாலா, லயன் சி.ஹரிகரன் ஆகியோர் தமது உரையில் தெரிவித்து தமக்குக் கல்விகற்பித்த ஆசான்களுக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் அவர்களுக்குத் தமிழ் பாடம் கற்பித்த தமிழாசான் ஜெகதீஸ்வரி ஆசிரியர், சுவிற்சர்லாந்திலிருந்து வருகைதந்த திருமதி கஜனி அகிலேந்திரன் ஆகியோருடன் இங்கு வாழும் 1997 கலைப்பிரிவு பழைய மாணவர்களும் கலந்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.