பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவிடுவதுடன் கல்வி மற்றும் ஊட்டச்சத்தில் முதலீடு செய்க! பெற்றோர்களுக்கு இலங்கையில் சச்சின் அறிவுரை

 

பிள்ளைகளுடன் நேரத்தை பெறுமதியாக செலவிடுவதுடன் கல்வி மற்றும் ஊட்டச்சத்தில் பிள்ளைகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தில் மட்டுமல்லாது ஒவ்வொரு நாட்டினது எதிர்காலத்திலும் நாம் முதலீடு செய்கின்றோம் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும் யுனிசெப்பின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான நல்லெண்ணத் தூதுவருமான சச்சின் டென்டுல்கர் தெரிவித்தார்.

அத்துடன் பாடசாலை மாணவர்கள் மிகுந்த மன உறுதியுடன் இருப்பதுடன் சிறந்த எதிர்காலத்துக்கான அவர்களின் நம்பிக்கையும் வலுவாகக் காணப்படுகின்றது. அவர்கள் தங்களது இலக்குகளை அடைவதற்குத் தொடர்ந்தும் நாம் உதவ வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

யுனிசெப்பின் தெற்காசியப் பிரதந்தியத்திற்கான நல்லெண்ணத் தூதுவர் என்ற ரீதியில் சச்சின் டென்டுல்கர் இலங்கைக்கு நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், அவர் சப்ரகமுவ மாகாணத்தில் யுனிசெப்பினால் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டத்தை பார்வையிட்டார்.

அத்துடன் அங்குள்ள சில பாடசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்ட சச்சின் டென்டுல்கர், பெருந்தோட்டத்துறைப் பகுதிகளில் வாழும் மக்களையும் சந்தித்து அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்துகொண்டார்.

சச்சின் தனது இலங்கைக்கான நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு அவரது விஜயம் குறித்து கூறுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்கள் சிலருடன் நான் கலந்துரையாடிய போது அவர்கள் என்னுடன் பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

பாடசாலை மாணவர்கள் மிகுந்த மன உறுதியுடன் இருப்பதுடன் சிறந்த எதிர்காலத்துக்கான அவர்களின் நம்பிக்கையும் வலுவாகக் காணப்படுகின்றது. அவர்கள் தங்களது இலக்குகளை அடைவதற்கு தொடர்ந்தும் நாம் உதவ வேண்டுமென சச்சின் குறிப்பிட்டார்.

சவால் மிக்க சூழலுக்கு மத்தியிலும் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் எடுக்கும் முயற்சிகளை பாராட்டினார் சச்சின்.

குழந்தைகள் தங்கள் முழுமையான திறனை அடைவதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு மற்றும் தரமான கல்வி என்பன அவசியமாகின்றன. அவர்களின் கல்வி மற்றும் ஊட்டச்சத்தில் முதலீடு செய்வதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தில் மட்டுமல்லாது ஒவ்வொரு நாட்டினது எதிர்காலத்திலும் நாம் முதலீடு செய்கின்றோம் என்றும் சச்சின் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் உரையாற்றிய சச்சின் டென்டுல்கர் –

அவர் முத்தையா முரளிதரனுடன் கிரிக்கெட் விளையாடிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நான் படசாலைக்காலங்களில் குறும்புத்தனமானவன். இலங்கைக்கான விஜயம் குறித்து பெருமையடைகின்றேன்.

நான் இலங்கைக்கு வந்து றுவன்வெல்ல பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுடன் எனது நேரத்தை செலவுசெய்யச் சந்தர்ப்பம் கிடைத்தது. அத்துடன் தேயிலை தோட்ட மக்களை சந்தித்து அவர்களின் குறை நிறைகளை கேட்டறிய சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து நான் அறிந்து கொண்டேன். அவர்கள் பிள்ளைகளை வளர்ப்பதற்கு சிரமப்படுவதையும் நான் அவதானித்தேன். பல குடும்பங்கள் பொருளாதார சிக்கல்களால் ஊட்டச்சத்துள்ள தரமான உணவுகளை பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுப்பதில் பல இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்.

கல்வி முக்கியமானது. இது அனைத்து சிறுவர்களின் வாழ்க்கைக்கும் அத்திபாரமாகும். போசாக்குள்ள உணவு மற்றும் கல்வி ஆகியன எமது சிறுவர்களின் எதிர்காலத்துக்கு பிரததானமானவைகளாகும். சுகாதார பழக்கவழக்கங்கள் குறித்து நாம் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறவேண்டும்.

கொவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் நாம் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளோம். வேலைத்தளங்கள் மூடப்பட்டன. பாடசாலைகள் மூடப்பட்டன. கல்வியில் மாணவர்கள் பெரும் பின்னடைவை எதிர்கொண்டனர். பல குடும்பங்கள் பல சவால்களை சந்திக்க நேர்ந்தது. இதனால் பல அச்சுறுத்தல்களை சந்தித்துள்ளோம்.

ஒரு குழந்தை கருவாக உருவானது முதல் உள்ள ஆயிரம் நாள்களில் பெரும்பாலான  80 வீதமான வளர்ச்சிகள்  இடம்பெறுகின்றன. அந்த வகையில் முதல் 2 வருடங்களும் மிக முக்கியமானவை. இந்தக் காலகட்டத்தில் நாம் ஊட்டச் சத்து தொடர்பான விடயங்களில் அவதானம் செலுத்த வேண்டும். இந்த விடயத்தில் பெற்றோர்கள், பெரியோர்கள் கரிசனை கொள்ளாது இருக்கின்றனர்.

குழந்தைகளுடன் மேலதிகமாக நேரத்தை செலவிடுங்கள். அவர்களுக்கு அன்பு, பாசத்தை ஊட்டுங்கள். அவர்களுடன் விளையாடுங்கள், அவர்களுடன் அரட்டை அடியுங்கள், அரவணைத்து தழுவுங்கள் இவ்வாறான செயற்பாடுகள் மிகவும் முக்கியமானவை எமது இணைப்பை தக்கவைத்துக்கொள்ளவதற்கு. இவையே பிள்ளைகளின் 80 வீதமான மூளை வளர்ச்சிக்கு மிகவும் காரணமாக அமைந்துள்ளன என அவர் மேலும் குறிப்பிட்டார்.

யுனிசெப் அமைப்பின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான முதலாவது நல்லெண்ணத் தூதுவராக சச்சின் டென்டுல்கர் 2013 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அன்றிலிருந்து தெற்காசியாவிலுள்ள சிறுவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு சச்சின் பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கிரிக்கெட் கட்ச் – அப் என்ற அமர்வில் பங்குபற்றிய இளைஞர்கள் குழுவுக்கு வளர்ச்சி பெறுவது, தடைகளைத் தாண்டி முன்னேறுவது, இலக்குகளை அடைவதில் எவ்வாறு உறுதியாக இருப்பது போன்ற விடயங்களில் தனது அனுபவத்தை சச்சின் டென்டுல்கர் பகிர்ந்து கொண்டார்.

இதேவேளை, நாட்டில் பொருளாதாரம் படிப்படியாக மீட்சிபெற்று வரும் நிலையில், சிறுவர்கள் உள்ளடங்கலாக 3.9 மில்லியன் பேர் போதிய உணவு இன்றியும் 4.8 மில்லியன் பேர் கற்பதற்கும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவிக்கின்றது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் நாடளாவிய ரீதியிலுள்ள 1400 பாடசாலைகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான முன்பள்ளி மாணவர்களுக்கு ஊட்டமளிக்கும் யுனிசெப்பின் மதிய உணவுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் பெருந்தோட்டப் பகுதிகளில் இரண்டு வயது வரையிலான பிள்ளைகள் உள்ள ஒரு லட்சத்து 10 ஆயிரம் குடும்பங்களுக்கு குழந்தைகளுக்குத் தெவையான ஊட்டச்சத்துள்ள உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருள்களை கொள்வனவு செய்ய யுனிசெப் நிதியுதவி வழங்கி வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.