ஐக்கிய இராச்சியத்தின் சுகாதாரப் பாதுகாப்பு புலமைப்பரிசில் திட்டம் 2024 இல் மீளவருகிறது!
ஐக்கிய இராச்சியத்தின் உதவித் திட்டத்தின் 2 ஆம் கட்டத்தை இலங்கையில் ஆரம்பிப்பது தொடர்பாக பிரித்தானிய பதில் உயர் ஸ்தானிகர் திருமதி லிசா வான்ஸ்டால், பிரித்தானிய சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஃப்ளெமிங் நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையில் புதன்கிழமை கொழும்பு அலரி மாளிகையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
கொவிட் தொற்றுநோய் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த சுகாதாரப் பாதுகாப்பு உதவித் திட்டம் 2024 ஜனவரியில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று பிரிட்டிஷ் பதில் உயர் ஸ்தானிகர் இங்கு தெரிவித்தார்.
இது நோயாளியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தேசிய சுகாதாரக் கொள்கை பற்றி அறிவிக்கவும் மற்றும் உருவாகி வரும் அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரிக்கவும் பொது சுகாதார கண்காணிப்புத் துறைக்கு ஆதரவளிக்கும்.
இந்த உவித் திட்டம் சுகாதார அமைச்சு, உலக சுகாதார தாபனம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு பயிற்சிப் புலமைப் பரிசில்கள் வழங்கப்படும்.
நாட்டின் சுகாதார முறைமையின் முன்னேற்றத்துக்கு மிகவும் பயனுள்ள இந்த சுகாதார சேவை திட்டத்தின் பயனாளியாக இலங்கையை தெரிவு செய்தமைக்காக ஐக்கிய இராச்சியத்திற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
இலங்கையின் சுகாதார சேவை பிரித்தானிய முறைமையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், இவ்வாறான சுகாதார சேவை திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித சிரமமும் ஏற்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரிட்டிஷ் கவுன்சிலின் வதிவிட பணிப்பாளர் ஓர்லாண்டோ எட்வர்ட்ஸ், கவுன்சிலின் ஆங்கில மொழி பயிற்சி முறைகள் குறித்த வெளியீட்டுத் தொகுதிகளை பிரதமரிடம் வழங்கினார்.
கிராமப்புறங்களில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு ஆங்கில மொழிக் கல்வியை அறிமுகம் செய்யுமாறு பதில் உயர் ஸ்தானிகராலயத்தையும், பிரிட்டிஷ் கவுன்சிலையும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய இராச்சியத்தின் பிலமிங் நிதியத்தின் கலாநிதி ஜெசிகா வொலிஸ் மற்றும் வைத்தியர் நேஹா குலாட், பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் பிரதம அதிகாரி அன்ட்ரூ பிரைஸ் மற்றும் பிரதமரின் மேலதிக செயலாளர் தீபா லியனகே ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை