முஸ்லிம் அரசியலில் நீங்கா இடம்பிடித்த முஸ்தபாவின் இழப்பு கவலையளிக்கிறது!
நூருல் ஹூதா உமர்
அம்பாறை மாவட்டத்தில் பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தின் அரசியல் வாரிசுகளில் ஒருவராக அரசியல் களமாடி தன்னை மக்கள் சேவகனாகப் பல்வேறு காலப்பகுதிகளிலும் நிரூபித்த உயர்கல்வி முன்னாள் பிரதியமைச்சர் மரியாதைக்குரிய எம்.எம்.எம். முஸ்தபா (மயோன் முஸ்தபா) காலமான செய்தி ; பேரிடியாக என்னை வந்தடைந்தது. (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்) என்று முன்னாள் இராஜங்க அமைச்சரும், ஸ்ரீ.ல.மு.கா பிரதித்தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கல்முனை தொகுதியின், அம்பாறை மாவட்டத்தின், கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்காக தனது அதிகார காலத்தில் உரத்து குரல்கொடுத்ததுடன் இலங்கை மாணவர்களின் கணனி அறிவை மேம்படுத்த தனது கல்வி நிறுவனத்தின் ஊடாக விதை போட்ட ஒரு கல்விமானாகவும், இலங்கையின் கல்வி மேம்பாடு தொடர்பில் அக்கறைகொண்ட புத்திஜீவியாகவும் தன்னை நிரூபித்த ஓர் அரசியல்வாதியாக திகழ்ந்த அன்னாரின் இழப்பு கவலையளிக்கிறது.
அரசியலில் ஒரே மேடையிலும், எதிர்க்கட்சி மேடையிலும் நாங்கள் அமர்ந்திருந்தாலும் கூட மக்களுக்கான விடயங்களில் ஒருமித்து நின்ற மக்களின் சேவகராகவே நான் அவரைக் காண்கிறேன். அந்த அறிக்கையில் மேலும், அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் மக்கள் பாதிக்கப்பட்ட போது அவர்களின் வீட்டுத்திட்ட தேவைகள் சம்பந்தமாக தனது அதிகார காலத்தில் குரல் கொடுத்ததுடன் மட்டுமன்றி வீட்டுத்திட்ட நிர்மாணிப்பு தொடர்பில் அரச தலைவர்களுடன் பேசி அதற்கான முயற்சிகளை அவர் முன்னெடுத்திருந்தமையை இங்கு எண்ணிப்பார்க்கிறேன். குறிப்பாக கல்முனை தொகுதி சுனாமி வீடமைப்பு திட்ட நிர்மாணிப்பு தொடர்பில் நானும் அவரும் ஒன்றித்து செய்த எத்தணிப்புக்களின் போது அவர் காட்டிய முனைப்பை இந்த நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.
பல்வேறு காலப்பகுதியிலும் கல்முனை தொகுதியின் வளர்ச்சியில் கரிசனை கொண்ட அவரின் சிந்தனைகள் கௌரவத்துக்கு உரியவை. சமூகம் தொடர்பிலும், கல்முனை மண் தொடர்பிலும் அவர் கொண்டுள்ள பற்று என்னை ஆச்சரியப்படுத்தியது. தனது அரசியலுக்காக கல்முனை மக்களை துண்டாட முனையாத அவரின் அரசியல் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியதாக காண்கிறேன். மிக நீண்ட தூரநோக்கு கொண்ட பல ஆலோசனைகளை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் எனக்கு வழங்கிய அவரின் மரண செய்தி என்னுள் ஆழ்ந்த சோகத்தை உண்டாக்கியுள்ளது.
பிரதேச, கட்சி வேறுபாடுகளை மறந்து முஸ்லிம் சமூகம் என்ற கொள்கையில் உறுதியுடன் இருந்தவர். முஸ்லிம் சமூகத்தின் உரிமை விடயங்களில் விட்டுக்கொடுப்புக்கள் இல்லாத ஒருவராக மிளிர்ந்தவர். அண்மையில் அவர் சுகவீனமுற்ற நிலையில் அவரை சுகம்விசாரிக்க வீட்டுக்கு சென்ற போதும் கல்முனை தொகுதி அரசியல் விடயங்கள், இலங்கை முஸ்லிம் அரசியலின் எதிர்காலம் பற்றி நீண்டநேரம் சிநேகபூர்வமாக பேசிய அவரது கருத்துக்கள் இன்று என்னுள் அசைபோடுகின்றன.
அவரின் இழப்பால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள், நண்பர்களுக்கு எனது ஆறுதல்களை தெரிவித்து கொண்டு காலமான என் நெஞ்சுக்கு நெருக்கமான மயோன் முஸ்தபா அவர்களின் நல்லமல்களை பொருந்திக்கொண்டு பாவங்களை மன்னித்து உயரிய ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை வழங்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிராக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.(
கருத்துக்களேதுமில்லை