நீர்வழங்கல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

 

ஐக்கிய நாடுகளின் விசேட செயற்திட்டத்துக்கான ஸ்தாபனத்தின் தெற்காசியாவின் பணிப்பாளர் சார்லஸ் காலனன் மற்றும் விசேட செயற்திட்ட முகாமையாளர், செயற்திட்ட மேலாளர் ஆகியோருக்கும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

நீர்வழங்கல் துறையில் விசேட செயற்திட்டங்களை அமுல்படுத்தவும், தடையின்றி நீர்வழங்கலை வழங்குதல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் நீர்வழங்கல் துறையில் புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்குதல் தொடர்பாகவும், எல் முதலீட்டு முறைமை மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவியுடன் நீர் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது தொடர்பாகவும் விரிவாகவும் ஆரப்பட்டது.

இதேவேளை, பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ள விசேட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதில் வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகள் அபிவிருத்தி தொடர்பாக விசேட செயற்திட்டங்களை மேற்கொள்ளவும், சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவிகளை நாடுவதற்கும் முன்மொழிவுகளை உருவாக்குவதற்கும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.

இந்தச் சந்திப்பில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வருண சமரதிவாகர, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகர் ஹரித்த விக்கிரமசிங்க, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் முகாமையாளர் வசந்தா இலங்காசிங்ஹ, பிரத்தியேக செயலாளர் மொஹமட் காதர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.