இலஞ்ச ஊழல் புதிய விசாரணை ஆணைக்குழு 15ஆம் திகதிக்கு பின்னர் நியமிக்கப்படும் – நீதி அமைச்சர்

தற்போதுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஏதாவது பிழையான தீர்மானங்களை வழங்கி இருந்தால் அது தொடர்பாக தேடிப்பார்க்கும் பூரண அதிகாரம் புதிய  ஆணைக்குழுவுக்கு இருக்கிறது.

15ஆம் திகதியில் இருந்து புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் செயல்வலுப்பெற்ற பின்னர், அரசியலமைப்பு சபையின் அனுமதிக்கமைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும் என நீதி அமைச்சர் விஜதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படுவது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவி்த்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது அமுலில்  இருக்கும் இலஞ்சம் அல்லது  ஊழல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் சுயாதீனமாக இல்லை என மக்கள் மத்தியில் கருத்தாடல் ஒன்று இருந்து வருகிறது.

அதற்கான நியாயமான காரணங்கள் இருக்கின்றன. 1094இல் ஏற்படுத்தப்பட்ட தற்போதைய இலஞ்சம் அல்லது  ஊழல் ஆணைக்குழு 29 வருடங்களாக  செயற்பட்டு வந்துள்ளது.

ஆனால் இலஞ்சம்,  ஊழல் இந்நாட்டில் இருந்து அகற்றப்படவில்லை. அதனால் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் ஒன்றை அனுமதித்துக்கொள்ள நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.

புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படும். அது தொடர்பான வர்த்தாமானி அறிவிப்பு இந்த வாரம் வெளிவரும்.

அத்துடன் இதுவரை இலஞ்ச சட்டம் செயற்படுத்தப்பட்டது அரச துறைக்கும் அரசியல்வாதிகளுக்கும் மாத்திரமாகும்.

என்றாலும் புதிய சட்டத்தின் மூலம் தனியார் துறையின் ஊழல் தொடர்பாக விசாரணை செய்ய முடியும். பாலியல் இலஞ்சம் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யவும் முடியுமாகிறது.

சட்டவிராேதமான முறையில் சம்பாதித்துக்கொண்ட  சொத்துக்களை வெளிநாடுகளில் வைப்பிலிட்டிருந்தால் அவற்றை மீள கையகப்படுத்தும் அதிகாரம் இந்த சட்டத்தின் கீழ் இருக்கிறது.

அதற்காக உலக வங்கியினால் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் காரியாலயத்துக்கு தேவையான அதிகாரங்களை வழங்கி இருக்கிறோம்.

மேலும் இலஞ்சம் அல்லது ஊழலை அகற்றுவதற்கு சட்டம் மட்டும் போதுமானதாக இல்லை. பொது மக்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.

இந்நாட்டில் இருந்து ஊழலை இல்லாமலாக்கினால் சில அரசியல் கட்சிகளின் இருப்பு இல்லாமல் போகும். தற்பாேதுள்ள இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயற்திறமை இன்மையால்  அனைத்து அரசியல்வாதிகளும்  விமர்சிக்கப்பட்டார்கள்.

தற்போதுள்ள இலஞ்ச ஆணைக்குழு எந்த விடயத்தை செய்தாலும்  அதற்கு வழங்கி இருக்கும் சுயாதீனத்தன்மை காரணமாக  அதன் நடவடிக்கைகளை தேடிப்பார்க்க முடியாது.

என்றாலும் புதிய சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளின் செயற்திறமை தொடர்பாக 4மாதங்களுக்கு ஒரு தடவை பாராளுமன்றத்துக்கு அறிக்கையிட வேண்டும்.

அத்துடன் தற்போதுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஏதாவது தவறான தீர்மானம் அல்லது தீர்ப்பு வழங்கி இருந்தால் அல்லது பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வழக்கு விசாரணைகளை வாபஸ் பெற்றுக்கொண்டிருந்தால் அது தொடர்பக தேடிப்பார்க்கும் பூர்ண அதிகாரம் புதிய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு இருக்கிறது.

இந்த மாதம் 15ஆம் திகதியில் இருந்து புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் செயல்வலுப்பெற்ற பின்னர், அரசியலமைப்பு சபையின் அனுமதிக்கமைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய ஆணையாளர்கள் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவதுடன் அவர்களை இணைத்துக்கொள்வதற்கான தீர்மானத்தை அரசியலமைப்புச் சபை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.