குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு என தொடரப்பட்ட வழக்கு : கஜேந்தரன், வினோ தலா ஒரு லட்சம் ரூபாய் ஆட்பிணையில் விடுதலை : ஜனவரி 11க்கு வழக்கு ஒத்திவைப்பு

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக கல்கமுவ சந்தபோதி தேரர் உள்ளிட்ட பௌத்த துறவிகளால் தொடரப்பட்ட வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் தலா ஒரு இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், குறித்த வழக்கு மேலதிக விசாரணைக்காக அடுத்த வருடம் ஜனவரி 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது முல்லைத்தீவு நீதிமன்றில் செப்டெம்பர் (14) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த வழக்கில் சந்தேக நபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிணை வழங்கப்பட்டதுடன், வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த வழக்கில் சந்தேக நபர்கள் தரப்பில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், க.சிவநேசன், சமூக செயற்பாட்டாளர் ஜூட் நிக்சன் ஆகியோரும் மன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில், குறித்த வழக்கு விசாரணைகள் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேக நபர்களாக இந்த வழக்கில் முதல் தடவை மன்றில் முன்னிலையாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரன் மற்றும் வினோ நோகராதலிங்கம் ஆகியோருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு அடுத்த வருடம் ஜனவரி 11ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.