திருகோணமலை தாக்குதல் சம்பவத்துக்கு சீமான் கண்டனம்

தியாக தீபம் அண்ணன் திலீபன் நினைவு ஊர்தி மீது தாக்குதல் – ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் இனவாத அடக்குமுறைகளைத் தடுத்து நிறுத்த , தமிழ்நாடு அரசு இந்திய ஒன்றிய அரசினை வலியுறுத்த வேண்டும்.

ஈழத்தாயகத்தில் திருகோணமலை கப்பல்துறையில் தியாக தீபம் அண்ணன் திலீபன் அவர்களை நினைவுகூரும் வகையில் தமிழ் மக்களால் உருவாக்கப்பட்டிருந்த திலீபன் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திமீது சிங்களக்காடையர்கள் தாக்குதல் நடத்தி அதனை சிதைத்ததோடு, தமிழ்த்தேசிய மக்கள் முண்ணனியின் பாராளுமன்ற உறுப்பினர் அன்புச்சகோதரர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் அவரது கட்சி செயற்பாட்டாளர்கள் 50 க்கும் மேற்பட்டவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஈழவிடுதலையில் ஆயுதப் போராட்டத்தின் அறத்தினையும், அவசியத்தினையும் தனது அகிம்சை போராட்டத்தின் மூலம் உலகிற்கு உணர்த்திய விடுதலைப்பேரொளி திலீபனின் ஈகத்தினைக்கூட நினைவுகூரக்கூடாது என்று விடுதலைப்போர் மௌனிக்கப்பட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகும் சிங்களக் காடையர்களை ஏவி இலங்கை அரசு திலீபன் நினைவேந்தலைத் தடுத்து நிறுத்துமாயின் தமிழர்கள் மீதான சிங்கள இனவெறி மனப்பான்மை என்றைக்கும் மாறாது என்பதற்கு இக்கொடும் நிகழ்வு மற்றுமொரு சான்றாகும்.

இலங்கை இனவாத அரசின் இராணுவ முகாம் எதிரில் சிங்கள காவல்துறையினர் முன்னிலையிலேயே தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள பாரளுமன்ற உறுப்பினர் சகோதரர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் மீது நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதல், சனநாயக முறையில் தமிழர்கள் ஒருபோதும் உரிமையைப் பெற்றுவிட முடியாது என்பதையே மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் அற்ப அரசியலைப்பு திருத்தங்கள் மூலம் அனைத்து உரிமைகளையும் தமிழர்கள் பெற்று வாழ்ந்திட முடியும் என்ற வரலாற்று பொய்யினை பன்னாட்டு அரங்கில் மீண்டும் மீண்டும் முன் வைக்கும் இந்திய ஒன்றிய அரசு இப்போதாவது இனவாத இலங்கை அரசைக் கண்டிக்க வாய் திறக்குமா?

தமிழ் மக்களின் சனநாயக பிரதிகளின் மீதான வன்முறை தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெறும் நிலையில் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு அதனை அமைதியாக வேடிக்கைப் பார்ப்பது ஏன் ? இதுதான் இந்தியா தமிழர்களுக்கான உரிமையைப் பெற்றுத்தரும் முறையா ? தமிழ்நாட்டினை ஆளும் திமுக அரசு வழக்கம்போல் கடந்து செல்லாமல் உடனடியாக , ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் இனவாத அடக்குமுறைகளைத் தடுத்து நிறுத்த இந்திய ஒன்றிய அரசினை வலியுறுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.