நிலாவத்தை தோட்டத்தின் 33 குடும்பங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வை வழங்குக! இராமேஷ்வரன் வலியுறுத்து

42 வருட காலமாக வாழ்ந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு அறிவித்தால் நிலாவத்தை தோட்ட மக்கள் எங்கு செல்வார்கள்.

33 குடும்பங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு  நாடாளுமன்ற உறுப்பினர்  மருதபாண்டி இராமேஷ்வரன் வனஜீவராசிகள்  மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியராட்சியிடம் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற காடு பேணற் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

வனஜீவராசிகள்,வனவளங்கள் பாதுகாப்பு சட்டங்களால் பெருந்தோட்ட மக்கள் குடிநீர் பெற்றுக்கொள்வதிலும், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள்.

வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சொந்தமான நுவரெலியா அப்கொட் நிலாவத்தை தோட்டத்தில் 42 வருடங்களுக்கும் மேற்பட்ட காலமாக 33 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

நிலாவத்தை தோட்டத்தில் வசிப்பவர்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றும் வகையில் நீதிமன்றம் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வனஜீவராசிகள்  அமைச்சுக்கு  அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் இன்று நேற்று அப்பகுதியில் வாழ்ந்தவர்கள் அல்லர், 42 வருடங்களாக அப்பகுதியில் வாழ்ந்து நாட்டுக்காக உழைத்துள்ளார்கள்.

நீதிமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பில் எதனையும் எம்மால் குறிப்பிட முடியாது.இவர்கள் இலங்கையர்கள் உடனடியாக வாழ்ந்த இடத்தை விட்டு செல்லுமாறு குறிப்பிட்டால் அவர்கள்  எங்கு செல்வார்கள்.

ஆகவே, இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து 33 குடும்பங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில்  ஒரு தீர்மானத்தை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்துகிறேன். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.