தேசிய அணியில் திறமையான கிழக்கு வீரர்கள் விளையாட வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவேண்டும்! கிழக்கின் கேடயம் பிரதானி எஸ்.எம்.சபீஸ் கோரிக்கை
நூருல் ஹூதா உமர்
விளையாட்டு உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கின்றது. இன்று இந்தியன் பிரீமியர் லீக் என்றும் ஸ்ரீPலங்கா பிரீமியர் லீக் என்றும் நடத்தப்பட்டு திறமைகள் அடையாளம் காணப்பட்டு அதிகளவான வீரர்கள் தேசிய அணிக்குள் உள்வாங்கப்படுகின்றபோது கிழக்கில் இன்னமும் மென்பந்தில் விளையாடிக் கொண்டிருக்கிறோம். இன்னும் எத்தனை நாள்களுக்கு நாம் மென்பந்தில் கிரிக்கட் விளையாடுவது, இது ஒருவேதனையான விடயமாகும். இன்னும் 10 வருடத்திலாவது எமது பிள்ளைகள் மென்பந்தில் உள்ள தேர்ச்சி இருக்கத்தக்கதாக கடினபந்திலும் அதியுச்ச தேர்ச்சி பெற்று தேசிய அணியில் விளையாடுவதற்கான ஆரம்ப ஏற்பாடுகளை செய்து கொண்டு வருகின்றோம். இன்னும் குறிப்பிட்ட நாள்களுக்குள் கடின பந்துக்கான பயிற்சிக் கூடாரத்தை விளையாட்டு வீரர்களுக்கு கையளிக்கவுள்ளோம் என அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் பிரதானியுமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.
பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப்பின் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு பாலமுனை மெரூன் விளையாட்டு கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரவுநேர மென்பந்து சுற்றுப்போட்டிகளின் இறுதிநாள் போட்டிகளுக்கு கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டபோதே அவர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான, நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், எஸ்.எம்.சபீஸ் முன்வைத்த விடயம் ஒரு முக்கியமான விடயமாகும். அம்பாறை மாவட்டத்தில் 150 கழகங்கள் அரச திணைக்களங்களில் பதியப்பட்டு விளையாட்டு உபகரணங்கள் வழங்க்கப்பட்டுள்ளன எனக் கூறுகின்றனர், ஆனால் யாருக்கு வழங்கினார்களோ தெரியாது. நிறைய திறமையான வீரர்களை இங்கு நான் காண்கிறேன். எமது வீரர்கள் தேசிய அணியில் இணைத்துக்கொள்வதற்கான வேலைத்திட்டங்களை நாம் செய்ய வேண்டும்.
இந்த விடயங்கள் தொடர்பில் நான் நாடாளுமன்றத்திலும் எதிர்காலத்தில் பேச உள்ளேன். மேலும் இலங்கை கிரிக்கட் சங்க தலைவரை அண்மையில் சந்தித்திருந்தேன். தங்களுக்கு உதவி தேவையென்றால் கேளுங்கள் என்று சொன்னார். சகோதரர் சபீஸ் கூறியது போன்று ஆரம்ப கட்ட விளையாட்டு உபகரணங்களை பெற்றுத்தர ஏற்பாடுகள் செய்து தருகிறேன். – என்றார்
கருத்துக்களேதுமில்லை