உண்மைகளை கண்டறிய சர்வதேச விசாரணையே ஒரேவழி – ஐ.நா.வின் தலையீட்டை வலியுறுத்தி திட்டவட்டமாக அறிவித்தார் சம்பந்தன்
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் சம்பந்தமாக உண்மைகளைக் கண்டறியப்பட வேண்டுமாயின் ஐக்கிய நாடுகளின் பிரசன்னத்துடனான சர்வதேச விசாரணையொன்றே அவசியம் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
உள்நாட்டு போர் நடைபெற்ற காலத்திலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களிலும் கொல்லப்பட்டவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை அரசாங்கம் புறந்தள்ளிவிட்டு தொடர்ந்தும் பொறுப்பின்றிச் செயற்பட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடரில் வெளியிடப்பட்டுள்ள இலங்கையில் மீளிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றை முன்னேற்றம் சம்பந்தமான ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் எழுத்துமூலமான அறிக்கை மற்றும், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பந்தமாக சர்தேச விசாரணையொன்று கோரப்படுகின்றமை ஆகிய விடயங்கள் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் மீறப்பட்ட மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் சம்பந்தமாக அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படுவதற்கு இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும், சர்வதேச தரப்பினரும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் எவ்விதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளையும் தொடராதிருப்பதோடு, ஒருசில விடயங்களை ஆரம்பித்திருப்பது போன்று வெளிப்படுத்தினாலும் அவற்றிலும் காலதாமதத்தினைச் செய்து வருகின்றது.
மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம், அவதானிப்பு அறிக்கை உள்ளிட்டவற்றையும் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கம் நிராகரித்து வருகின்றது.
இலங்கை அரசாங்கம் ஒருவிடயத்தினைப் புரிந்துகொள்ள வேண்டும். உள்நாட்டுப் போரின்போது, இளைஞர்களும், யுவதிகளும் பாதுகாப்பை தேடி படையினரிடத்தில் சரணடைந்தார்கள். அதன் பின்னர் அவர்கள் வலிந்து காணமலாக்கப்பட்டுள்ளார்கள். படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள். அவர்களுக்கான பாதுகாப்பை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால் அந்தக் கடமையிலிருந்து அரசாங்கம் விலகியுள்ளது.
இந்நிலையில், சரணடைந்தவர்கள், கொலைசெய்யப்பட்டவர்கள், காணாமலாக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இந்தச் செயற்பாட்டை முன்னெடுக்க முடியாது என்று அரசாங்கம் தொடர்ச்சியாக புறந்தள்ளிச் செயற்பட முடியாது. அதுமட்டுமன்றி உள்ளக ரீதியில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று காரணம் கூறிக் காலங்கடத்தவும் முடியாது.
உள்ளக ரீதியில் எவ்விதமான முன்னேற்றகரமான விசாரணைகளும் இடம்பெறவில்லை என்பது கடந்த காலங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, உண்மைகளைக் கண்டறிவதற்காக ஐ.நாவின் பங்கேற்புடன் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு நான்கு வருடங்களாகின்றன. இதுவரையில் அதனுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.
இந்நிலையில் தற்போது அந்தத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 ஊடகம் காணொளியொன்றை வெளிப்படுத்தியுள்ளது. அதில் கூறப்படுகின்ற விடயங்களுக்கு அமைவாக விசாரணைகளை முன்னெடுக்கமாறு பேராயர் உள்ளிட்ட பல தரப்பினரும் கோருகின்றார்கள்.
அத்துடன், உள்ளகப் பொறிமுறைகள் ஊடான விசாரணைகள் மீது நம்பிக்கையின்னை ஏற்பட்டுள்ளதால் சர்வதேச விசாரணையொன்றை தென்னிலங்கையின் பல தலைவர்களும் கோருகின்றார்கள். அவ்வாறான மாற்றம் வரவேற்கத்தக்கது.
ஆகவே, அரசாங்கம், இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் உயிரிழந்த உறவினர்களுக்கு பொறுப்புக்கூற வேண்டுமாயின் சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுத்து உரியவர்களை வெளிப்படுத்த வேண்டும். அதில் தொடர்ந்தும் தாமதங்களை அரசாங்கம் செய்கின்றபோது சர்வதேசம் தலையீடுகளைச் செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்துகின்றேன் என்றார்.
கருத்துக்களேதுமில்லை