மாகாண அதிகாரம் மத்தியின் கைகளில்: ஆளுநர் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் அவைத் தலைவர் சிவஞானம் கோரிக்கை

மாகாண அதிகாரம் மத்திக்கு செல்வதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாததோடு வடமாகாண ஆளுநர் அதற்கு உடந்தையாக இருக்கக் கூடாது என வட மாகாண சபை அவை தலைவர் சி.வி.கே. சிவஞானம் கோரிக்கை விடுத்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

தற்போதைய ஆளுநரின் பதவியேற்புக்கு நான் சென்ற நிலையில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதை நான் பொருட்படுத்தவில்லை.

மக்கள் பிரதிநிதியாக அந்த நிகழ்வுக்கு சென்றமை சரி என்பதே எனது நிலைப்பாடு.

இவ்வாறான நிலையில் வட மாகாண ஆளுநர் மாகாண யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளரை வட மாகாண சுகாதார பணிப்பாளராகத் தொடர்வதற்கு சமிக்ஞை காட்டுவதாக ஊடகங்கள் மூலம் அறிந்தேன்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்திக்கும் எமக்கும் பிரச்சினை இல்லை. ஆனால், மத்திய அரசின் அதிகாரியாக இருக்கும் சத்தியமூர்த்தி மாகாண அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது.

விரும்பினால், மத்திய அரசின் பதவி நிலைகளைக் கைவிட்டுவிட்டு மாகாண அதிகாரத்தின் கீழ் பதவி நிலைகளை வகிக்க முடியும்.

வட மாகாண ஆளுநர் மாகாண அதிகாரத்தை மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் சத்தியமூர்த்திக்கு வழங்குவது தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக அறிய முடிகிறது.

நான் ஆளுநரின் பதவியேற்புக்குச் சென்றதன் பின்  இன்று வரை அவருடன் பேசியது இல்லை என்னுடைய வேலைகளை நான் பார்க்கிறேன் அவருடைய வேலைகளை அவர் பார்க்கிறார்.

ஆகவே மாகாண அதிகாரத்தை மத்திக்கு விட்டுக்கொடும் நிலைப்பாட்டில் ஆளுநர் செயற்படுவாராயின் அதனை அவர் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். – என்ற கருத்து எனது கருத்தாக பதிவு செய்ய விரும்புகிறேன்  எனத் தெரிவித்தார். (05)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.