அலி சப்ரி ரஹீம் தொடர்பில் ஏன் இதுவரையில் சட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை? இலஞ்ச, ஊழல், வீண் விரயத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி கேள்வி
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சட்ட விரோதமான முறையில் தங்கத்தைக் கொண்டு வந்தமை தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
இருப்பினும் இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் எந்தவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என இலஞ்ச, ஊழல், வீண் விரயத்துக்கு எதிரான பிரஜைகள் சக்தியின் தலைவர் ஜாமுனி காமந்த துஷார தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சட்ட விரோதமான முறையில் தங்கத்தைக் கொண்டு வந்தமை தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்தமை தொடர்பில் இலஞ்ச, ஊழல், வீண் விரயத்துக்கு எதிரான பிரஜைகள் சக்தி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
சுங்க கட்டளைச் சட்டத்தின் 129 ஆவது சரத்தின் படி ஏதேனும் குற்றவாளிக்கு 3 வருடங்கள் அபராதம் விதிக்க விசாரணை அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது.
இந்த சட்டத்தின் 163 ஆவது சரத்தின்படி அரசுடைமையாக்குவது அல்லது தண்டனைக்குரிய குற்றமாக அடையாளம் காணப்படும் சந்தர்ப்பத்தில் அதனைத் தளர்த்துவதும் விசாரணை அதிகாரியிடம் உள்ளதாக சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தால் வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயங்களைக் கருத்தில் கொண்டு நோக்கும் போது முறைப்பாடுகள் தொடர்பில் தொடர்ந்தும் செயற்படாமல் இருக்க ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இது திருடனின் தாயிடம் கேட்பதை போன்று சுங்கத்திணைக்களம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் இது சரியா அல்லது தவறா? என்பது கேட்டு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை நிறைவு செய்கிறது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு புதிய சட்டமொன்றைக் கொண்டு வந்தது. திருடர்களை காப்பாற்றவா இந்த சட்டங்கள் இருக்கின்றன? என நாம் வினவுகிறோம். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை