மட்டு. ஷரிஆ பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்கு இலங்கை தகவல் தொழில்நுட்பக் கல்லூரி பொறுப்பு! பாதுகாப்பு சபை கூட்டத்தில் தீர்மானம்
மட்டக்களப்பு – புனானியில் நிர்மானிக்கப்பட்டுள்ள ஷரிஆ பல்கலைக்கழகத்தின் உரிமத்தை எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு தொடர்ந்தும் வழங்கவும் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு அதிகாரத்தை ஹோமாகமவில் அமைந்துள்ள இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்லூரிக்கு வழங்கவும் பாதுகாப்பு சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரத்தில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கியூபா மற்றும் அமெரிக்கா சென்றிருந்த நிலையில், ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் பாதுகாப்பு சபை கூட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விடயங்கள் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது.
பாதுகாப்புத்துறை சார்ந்த பிரதானிகளை தவிர, இலங்கை தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளும் பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2019 ஆம் ஆண்டில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட மட்டக்களப்பு ஷரிஆ பல்கலைக்கழகம் குறித்து பாதுகாப்பு சபை கூட்டத்தில் கவனத்துக்குட்பட்டது.
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவினால் நிர்மானிக்கப்பட்டிருந்த இந்த ஷரிஆ பல்கலைக்கழத்தின் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு அதிகாரத்தை ஹோமாகமவில் அமைந்துள்ள இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்லூரிக்கு வழங்கவும் பல்கலைக்கழகத்தின் உரிமத்தை தொடர்ந்தும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு வழங்கவும் பாதுகாப்பு சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து மட்டக்களப்பு – புனானியில் நிர்மானிக்கப்பட்டுள்ள ஷரிஆ பல்கலைக்கழகம் குறித்து சர்ச்சைகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமைய, இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் மட்டக்களப்பு ஷரிஆ பல்கலைக்கழகம் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை