5 கொங்ரீட் ஆணிகளை உட்கொள்ள வைத்தனர்! பணிப்பெண்ணாகச் சென்றவர் குற்றச்சாட்டு!
சவுதி அரேபியவிற்கு பணிப்பெண்ணாக சென்ற மாத்தளை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ”தான் பணிபுரிந்த வீட்டில் தன்னை 5 கொங்ரீட் ஆணிகளை விழுங்க வைத்தனர்” என வத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மாத்தளை அல்கடுவ பிரதேசத்தில் உள்ள தோட்டப்பகுதியில் வசிக்கும் ஒரு பிள்ளைக்குத் தாயான இருபத்தொரு வயதான தியாகசெல்வி என்பவரே இவ்வாறு முறைப்பாடு அளித்துள்ளார்.
குறித்த அவர் தெரிவித்துள்ளதாவது “ கடந்த ஜுன் மாதம் கொழும்பில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் ஊடாக வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக சவுதி சென்றேன். அங்கு நான் பணிபுரிந்து வந்த வீட்டில் உள்ளவர்கள் எனக்கு உணவு வழங்காமல் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் சித்திரவதை செய்து வந்தனர்.
இதனையடுத்து எனது நிலை குறித்து வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் தெரிவித்திருந்தேன். இதனால் கோபமடைந்த வீட்டு உரிமையாளரும் அவரின் தாயாரும் ஒன்றாக சேர்ந்து என்னை கொடூரமான முறையில் தாக்கியதோடு, பின்னர் 5 கொன்கிரீட் ஆணிகளை விழுங்கும்படியும் கட்டாயப்படுத்தினர்.
பின்னர், துணிகளை உலர்த்துவதற்கு பயன்படுத்தப்படும் வெள்ளை இரும்பினால் செய்யப்பட்ட ஸ்பிரிங் ஒன்றையும் விழுங்கவைத்தனர். இதன்போது குறித்த இரும்புத் துண்டு தனது தொண்டையில் சிக்கியது.
சில நாட்களுக்குப் பின்னர் எனது வயிறு மற்றும் வாயில் இருந்து இரத்தம் வரத் தொடங்கியதையடுத்து குடியிருப்பாளர்கள் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதன்போது என்னைப் பரிசோதித்த மருத்துவர்கள் எனது வயிற்றில் ஐந்து இரும்பு ஆணிகள் இருப்பதைக் கண்டு, எனக்கு சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளனர்.அதன் பின்னர் சவூதி வைத்தியசாலையொன்றில் உள்ள வைத்தியர் ஒருவரின் தலையீட்டின் மூலம் தூதரகத்தின் ஊடாக நான் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டேன்.
பின்னர் கண்டி வைத்தியசாலையில் பரிசோதனை செய்து பார்த்த போது எனது வயிற்றில் மேலும் இரண்டு ஆணிகள் இருப்பது எக்ஸ்ரே மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவர்களால் ஒரு ஆணி அகற்றப்பட்டதோடு மற்றொரு இரும்பு ஆணி தனது வயிற்றின் பின்புறத்தில் தற்போதும் உள்ளது” இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு அறிவித்த போதும் அவர்கள் பதிலளிக்கவில்லை எனத் தெரிவித்த பெண்ணின் தாயார், கணவனை பிரிந்து குழந்தையுடன் தனியாக வாழும் தனது மகள், குழந்தையின் எதிர்காலத்திற்காகவே வெளிநாடு சென்றார் எனக் கவலை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட விசாரணைகளை தற்போது முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை