தனது ஆரூடம் பலித்துள்ளதாக அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டு
சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்தவதற்கு செல்கின்றபோது அதனுடன் செய்யப்பட்டன உடன்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டிய சூழல் உருவாகும்.
அதனால் உள்நாட்டில் பாரிய நெருக்கடிகள் ஏற்படும் என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஆரூடமாக கூறியிருந்த நிலையில் தற்போது அவ்வாறான நிலைமைகளே தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்தின் முதலாம் தவணைக் கொடுப்பனவு மீளய்வு தொடர்பில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பீற்றர் புரூவர் தலைமையிலான கருத்துக்கள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார ரீதியான சில பின்னடைவுகள் ஏற்பட்டபோது, அவற்றை முகங்கொடுத்து மேலெழுவதற்கான நடவடிக்கைகளை உள்நாட்டிலும் இதர நிதி மூலங்கள் ஊடாகவும் முன்னெடுப்பதே பொருத்தமானது என்ற நிலைப்பாட்டை நான் வெளிப்படுத்தியபோது என்னை கடுமையாக விமர்சித்தார்கள்.
அத்தோடு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது தான் ஒரே தீர்வு என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி அச்செயற்பாட்டை மேற்கொண்டார்கள். தற்போது அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டதொரு நிலைமையே ஏற்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்து தமது முதலாவது மீளாய்வினை நிறைவு செய்துள்ளார்கள். அந்த மீளாய்வின் இறுதியில் அவர்கள் உள்நாட்டில் வரி வருமானத்தை அதிகரித்தல், கடன்மறுசீரமைப்பை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், அவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரையில் இரண்டாவது தவணைக்கொடுப்பனவுக்கான கால எல்லையை கூற முடியாதெனவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு அமைவாக நடவடிக்கைகளை எடுப்பதாக இருந்தால், மின்சாரப்பட்டியல், நீர்க்கட்டணம், வரி வருமானம் உள்ளிட்ட அனைத்தையும் அதிகரிக்க வேண்டியுள்ளது.
அதேநேரம், நலத்திட்டங்களையும், அரச ஊழியர்களின் எண்ணிக்கையையும் வெகுவாகக் குறைக்க வேண்டியுள்ளது. மேலும் உள்நாட்டு கடன்மறுசீரமைப்பைச் செய்வதாக இருந்தால் ஊழியர் சேமலாப நிதியில் கைவைக்க வேண்டியுள்ளது.
அவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றபோது உள்நாட்டில் மக்கள் சாதாரணமானதொரு வாழ்க்கையை வாழ முடியதவொரு நிலையே உருவாகும். மக்கள் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகுவார்கள். இதனால் குழப்பமான நிலைமைகளே மீண்டும் உருவெடுக்கும்.
ஆகவே, தனிமனிதாக என்னுடைய ஆரூடத்தினை அன்று நிராகரித்தவர்கள் தற்போது பொதுமக்களுக்கு பொறுப்பான பதிலளிக்க வேண்டியவர்களாகியுள்ளனர் என்றார்.
கருத்துக்களேதுமில்லை