அரச பொதுச் சேவைகள்சங்க கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன!
நூருல் ஹூதா உமர்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை, விலைவாசி அதிகரிப்பு அதனைத் தொடர்ந்து வந்துள்ள அரசியல் நெருக்குவாரங்களுக்கு மத்தியில் அரச சேவை தொழில் உரிமை, பாதுகாப்பு, கௌரவம் என்பனவற்றை இழந்த நிலையில் இன்று ஆட்டம் கண்டுள்ளது. தொழில் வல்லுநர்கள், நிபுணத்துவ மிக்க கல்வியியலாளர்கள், உட்பட ஏன் நீதிபதிகளே இந்த நாட்டை விட்டு தப்பி ஓடும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. இதிலிருந்து பாதுகாக்க அனைத்து அரச உத்தியோகத்தர்களும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் தலைவர் க.நடராஜா தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் பொதுச் சேவைகள் சங்கத்தின் அம்பாறை மாவட்ட குழு கூட்டம் திருக்கோயில் குமர வித்தியாலயத்தில் சங்கத்தின் அமைப்பாளர் பி.கோகுலோஜன் தலைமையில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் இங்கு உரையாற்றிய இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.புஹாது, தொழிற்சங்கங்களின் பலம் பலவீனமாகி கொண்டிருக்கின்றன. தொழிற்சங்கங்களால் விடுக்கப்படும் நியாயமான கோரிக்கைகளை அலட்சியம் செய்யும் அதிகாரிகளின் மனநிலையில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான செய்தியை தெளிவாகக் கூறுவதற்கு அரச உத்தியோகத்தர்கள் ஒற்றுமைப்பட வேண்டியது அவசியமானதாகும். அரசியல் அதிகாரம் கொண்டவர்களின் எல்லை மீறிய அழுத்தங்களுக்கு இடமளிக்காது, அரச சேவையின் சுயாதீனத்தையும், கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டிய நிலைமைக்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்காக அனைத்து அரச உத்தியோகத்தர்களும் வேறுபாடுகளை மறந்து தம்மோடு கைகோர்க்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதன் போது புதிதாக இணைந்து கொண்ட அங்கத்தவர்களுக்கான தொழிற்சங்க அங்கத்துவ பத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், தற்போதைய விலைவாசி அதிகரிப்பு வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு ஏற்ப அரச ஊழியர்களின் சம்பளத்தை ரூபா 20,000 அதிகரிக்க கோரல். 2020, 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றக் கட்டளைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த கோரல். கிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள இணைந்த சேவை உத்தியோகத்தர்களுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான இடமாற்றத்தின் போது உத்தியோகத்ர்களது கோரிக்கைக்கு மாற்றமாக இடமாற்றக் கட்டளைகள் வழங்கப்படுவதனை முடியுமானவரை தவிர்க்க கோரல்
பொது நிர்வாக அமைச்சின் 10ஃ 2000 சுற்றக்கைக்கு அமைவாக, கிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள அமைச்சுகளில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை உள்ளடக்கியதான ஆலோசனைக் குழுக்களை ஸ்தாபிப்பதன் மூலம் காரியத்திறனையும் உற்பத்தி பெருக்கத்தையும் மேம்படுத்த கோரல், அம்பாறை மாவட்ட வெளிக்கள கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு கடந்த ஆட்சியின் போது மறுக்கப்பட்டுள்ள சலுகை விலை அடிப்படையிலான மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டத்தை 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவில் உறுதிப்படுத்த கோரல், வடக்கு கிழக்கில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கென தனியான வீடமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரல்.
உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் அமைய, தற்காலிக மற்றும் பதிலீட்டு ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரல். திறமை அடிப்படையிலான பதவி உயர்வு – போட்டி பரீட்சை முறமையை மீள ஏற்படுத்தக் கோரல், அரசாங்க முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகத்தர்களை எம் என் 4 சம்பள அளவு திட்டத்தில் அமர்த்துவதோடு, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் தொழிற் தகைமையைமேம்படுத்தும் வகையில் முகாமைத்துவ பயிற்சி நிலையம் ஒன்றே ஏற்படுத்த கோரல், அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் மேற்பார்வை தரத்திலான சுப்ரா தர பதவி அணியினை ஏற்படுத்தக் கோரல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர், வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர், கிழக்கு மாகாண ஆளுநர், இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் , தாபன பணிப்பாளர் நாயகம், வரவு – செலவுத் திட்டப் பணிப்பாளர் ஆகியோர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை