சார்ஜன்ட் ஹனீபா மரணம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குக! ரிஷாத் பதியுதீன் வலியுறுத்து
பொலொன்னறுவை, வெலிக்கந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஏறாவூரைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் முஹம்மது மக்பூல் ஹனீபா, பொலிஸ் விடுதியில் இரத்தம் தோய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் எமது கட்சியின் உயர்பீட உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் அவர்கள் என்னிடம் முன்வைத்த வேண்டுகோள் தொடர்பில், தங்களது கவனத்தை செலுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வேண்டியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்படுள்ளவை வருமாறு –
‘கடமை செய்யும் தமது பொலிஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பொலிஸாரின் விடுதியில் வைத்து இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை, நீதியை நிலைநாட்டும் பொலிஸாருக்கே இந்த நிலையா? எனக் கேட்கத் தோன்றுகின்றது.
நாட்டின் தற்போதைய நிலையில், பொலிஸார்மீது பொதுமக்கள் கொண்டுள்ள சந்தேகங்களுக்கு மத்தியில், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் சிறுபான்மை பொலிஸ் அதிகாரிகளுக்கு இழைக்கப்படும் இவ்வாறான கொடூரங்கள் நிறுத்தப்படல் வேண்டும் என்பது மட்டுமல்லாது, இப்படிப்பட்ட ஈனச்செயல்களைச் செய்பவர்கள் எவராக இருந்தாலும் தராதரம் பாராது சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவது, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகிய தங்களது கடமையாகும்.
அதேவேளை, வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி இந்த மரணம் தொடர்பில் கொடுத்துள்ள அறிக்கை, கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டுள்ளமை தொடர்பில் குறிப்பிட்டுள்ளதால், இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் இவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் திட்டம் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் அவர் இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மர்ஹூம் மக்பூல் முஹம்மத் ஹனீபா மிகவும் நேர்மையான ஓர் அதிகாரி என்றும் ஊழல், மோசடிகளை வன்மையாக எதிர்க்கும் மனப்பக்குவத்தை கொண்ட ஒருவராகவும் காணப்பட்டார் என்பதைப் பிரதேச மக்கள் சான்றுபகர்ந்துள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள அவர், மக்பூல் ஹனீபா பொலிஸ் நிலையத்தின் அவசர அழைப்பு பிரிவான 119 இற்கு பொறுப்பாக செயற்பட்டு வந்துள்ளார் எனவும் இதனை கவனத்தில்கொள்ளுமாறும் தமது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இவ்வாறான மிலேச்சத்தனமான கொடூரங்கள், இனியும் இடம்பெறாதவாறு சட்ட நடவடிக்கையெடுக்குமாறும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பநிலையைக் கவனத்திற்கொண்டு, அவர்களுக்கான நீதியை உறுதிப்படுத்துமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.(
கருத்துக்களேதுமில்லை