உலக வங்கியின் ஆதரவுடன் கிராமிய வீதிகள் அபிவிருத்தி
இலங்கையில் உலக வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 90.98 கிலோமீட்டர் நீளமான வீதி வேலை திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தனுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
இலங்கையில் வீதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாக உலக வங்கியின் கடன் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மற்றும் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (05) செத்சிரிபாயவிலுள்ள கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மேற்படி வீதி வேலைத்திட்டங்களுக்கான கேள்வி நடைமுறைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்த வதிவிட பிரதிநிதி, மிக விரைவில் வீதி வேலைகளை ஆரம்பிப்பதற்க்கான துரித நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினார்.
இதன்போது கருத்து தெரிவித்த கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள வீதிகளில் மக்கள் போக்குவரத்து செய்யாமல் உள்ளதாக சுட்டி காட்டியுள்ளதுடன் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியிலே இப்பகுதி மக்கள் தங்கள் பங்களிப்பை வழங்குவதற்கு வீதிகள் அபிவிருத்தி அத்தியாவசியமானது என தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள கிராமிய வீதிகள் அபிவிருத்தி திட்டங்களை விரைவாக நிறைவு செய்யவும் மற்றும் எதிர்காலத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள கிராமிய வீதிகள் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை