ஆட்சி அதிகாரத்தைச் சஜித்திடம் ஒப்படைக்க மக்கள் மூடர்களல்லர்! நிமல் சிறிபாலடி சில்வா கூறுகிறார்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க நாட்டு மக்கள் மூடர்களல்லர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொய்யுரைக்காமல் உண்மையைக் குறிப்பிட்டு அரச நிர்வாகத்தை முன்னெடுக்கிறார் என கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மூளைசாலிகள் வெளியேற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –
பொருளாதாரப் பாதிப்பால் மூளைசாலிகள் தற்போது நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மூளைசாலிகள் வெளியேற்றம் இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல என்பதை எதிர்க்கட்சியினர் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். மூளைசாலிகள் வெளியேற்றத்தை தமது அரசியல் பிரசாரத்துக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத காரணத்தால் மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்று எதிரணியினர் குறிப்பிடுகிறார்கள். நாட்டில் யார் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது. அரகலய என்பதொன்றை ஆரம்பித்து நாட்டில் பயங்கரவாத செயற்பாடுகளைத் தோற்றுவித்தவர்கள் தான் இன்று ஸ்திரமற்ற அரசியல் காரணிகளால் மூளைசாலிகள் வெளியேறுகிறார்கள் என்று குறிப்பிடுகிறார்கள். இதுவேடிக்கையாகவுள்ளது.
பொருளாதாரப் பாதிப்புக்கு ஓரிரு இரவில் தீர்வு காண முடியாது. வரியை அதிகரித்தாலும் விமர்சிக்கிறார்கள், குறைத்தாலும் விமர்சிக்கிறார்கள். வரி வருமானத்தை அதிகரிக்காமல் ஒருபோதும் பொருளாதாரப் பாதிப்புக்குத் தீர்வு காண முடியாது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் அறியாமல் இருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆட்சியதிகாரத்தை வழங்க மக்கள் முட்டாள்களல்லர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தினார். வங்குரோத்து நிலைக்கு மத்தியில் பிரபல்யமடையும் வகையில் ஜனாதிபதி செயற்படவில்லை. நாட்டு மக்களுக்கு உண்மையைக் குறிப்பிட்டு சிறந்த முறையில் செயற்படுகிறார். ஆகவே, நாட்டு மக்கள் வெகுவிரைவில் உண்மையை விளங்கிக் கொள்வார்கள். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை