யுத்தக் காலத்தைவிடவும் தற்போது மூளைசாலிகள் வெளியேற்றம் தீவிரம்! மைத்திரிபால தெரிவிப்பு

 

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தாமல் எப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது . ஆகவே உடனடியாக தேசிய தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும்.

மூளைசாலிகள் வெளியேற்றம் பாரிய எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் தொழிற்றுறையினருடன் முரண்பட்டுக் கொண்டிருக்கிறது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மூளைசாலிகள் வெளியேற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

படித்த இளம் தலைமுறையினர் நாட்டை விட்டு வெளியேறுவதை பிரதான நோக்கமாக கொண்டுள்ளார்கள். 30 வருட கால யுத்த காலத்தில் மூளைசாலிகள் வெளியேறியதை போன்று தற்போதும் மூளைசாலிகள் வெளியேறினார்கள் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. யுத்த காலத்தை காட்டிலும் தற்போது மூளைசாலிகள் வெளியேற்றம் தீவிரமடைந்துள்ளது.

விசேட வைத்தியர்கள், வைத்தியர்கள் உட்பட சுகாதார தரப்பினர் நாட்டை விட்டு வெளியேறுகின்றமை பாரதூரமானது. வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் சுகாதாரக் கட்டமைப்பு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் நடுத்தர மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். ஒரு வைத்தியர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 50 பேருக்கு சாதாரண அளவு சிகிச்சையளிக்க முடியும்.

ஆனால் தற்போதைய நிலையில் அரச வைத்தியசாலைகளில் வைத்தியர் ஒருவர் ஒரு நாளைக்கு 200 இற்கும் அதிகமானோருக்கு சிகிச்சையளிக்க வேண்டியுள்ளது.

சுகாதாரக் கட்டமைப்பைப் போன்று பல்கலைக்கழக கல்வி கட்டமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. விரிவுரையாளர்கள் பற்றாக்குறை காரணமாகபெரும்பாலான பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இது மிகவும் பாரதூரமானது. கல்வித்துறை வீழ்ச்சியடைந்தால் சிறந்த எதிர்கால தலைமுறையினரை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.

மூளைசாலிகள் வெளியேற்றத்துக்குத் தீர்வு காண அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? தொழிற்றுறையினருடன் பேச்சுகள் மேற்கொள்வதைத் தவிர்த்து அவர்களுடன் அரசாங்கம் முரண்பட்டுக் கொண்டிருக்கிறது.

நாட்டில் அரசியல் நெருக்கடி தோற்றம் பெற்றதன் பின்னரே சகல பிரச்சினைகளும் தோற்றம் பெற்றன. இன்று ஆளும் கட்சியும் பிளவடைந்துள்ளது, எதிர்க்கட்சிகளும் பிளவடைந்துள்ளன.

இவ்வாறான நிலையில் எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது. நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையுடன் தான் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். ஆகவே உடனடியாக தேசிய தேர்தல்களை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.