நஸீர் அஹமட்டின் கட்சி உறுப்புரிமை நீக்கத்துக்கான உயர்நீதிமன்ற தீர்ப்பு கட்சி தாவுவோருக்கு எச்சரிக்கை முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டு
அமைச்சர் நஸீர் அஹமட்டின் கட்சி உறுப்புரிமை நீக்கம் சரியானது என உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று சரித்திரம் மிக்கதாகும்.
இடைக்கிடையே அரசியல் இலாபங்களுக்காகக் கட்சி தாவும் தரப்பினருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள அபாய எச்சரிக்கையாகவே இது காணப்படுகிறது.
எதிர்காலத்தில் இவர்களைப் போன்றவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும் என எதிர்க்கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு –
குருதூர்மலை விவகாரத்தை முன்னிறுத்தி பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதற்குக் கடந்த காலங்களில் பல சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதனை தொடர்ந்து மட்டக்களப்பு காணிப்பிரச்சினையை அடிப்படையாகக்கொண்டு இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சித்தனர். சமூக ஊடகங்களின் மூலமாகவும் இனங்களுக்கு இடையில் பிரச்சினையை உருவாக்க முயற்சிக்கின்றனர்.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது நாட்டில் மீண்டும் இனவாதத்தை தோற்றுவிக்க சிலர் முயற்சித்து வருகின்றனரா என்ற சந்தேகம் எழுவதாகத் தோன்றுகின்றது. ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் 7, 8 மாதங்களே காணப்படும் நிலையில் இவ்வாறான பிரச்சினைகள் ஏன் தோற்றுவிக்கப்படுகிறது என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
மேலும் கட்சியின் தீர்மானங்களுக்கு மாற்றமாக செயற்பட்டமை தவறு என நஸீர் அஹமட் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
இதன்காரணமாக அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை இல்லாமல் போகும். இடைக்கிடையே கட்சி தாவும் தரப்பினருக்கு உயர் நீதிமன்றம் விடுத்துள்ள அபாய எச்சரிக்கையாக இதை நாம் கருதுகிறோம். குறிப்பாக கட்சியிலிருந்து பலர் அமைச்சு பதவிகளுக்காகச் சென்றார்கள்.
இவர்களுக்கு எதிராகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரலாற்று சரித்திரம் மிக்க தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
விருப்பு வாக்கு வழங்குவதற்கு முன்னதாக கட்சிக்கே வாக்களிக்க வேண்டும். கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்கு கட்டுப்படவேண்டும்.
கட்டுப்பட முடியாவிட்டால் பதவியில் இருந்து விலகவேண்டும். கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்குகளைப் பெற்று விட்டு பின்னர் நாடாளுமன்றத்தில் ராஜபக்ஷக்களுக்கு ஆதரவாக செயற்பட நாட்டு மக்கள் வாக்களிக்கவில்லை. நஸீர் அஹமட் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எதிர்காலத்தில் மேலும் பலருக்கு படிப்பினையாக அமையும்.
இதேவேளை, கொள்ளுப்பிட்டி விபத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபா நட்டஈடு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டில் இடம்பெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அரசாங்கத்தால் பிற்போடப்பட்டிருந்தது. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் உரிய முறையில் இடம்பெற்றிருந்தால் ஒவ்வொரு சபைக்கும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள்.
குறித்த பகுதிகளில் காணப்படும் குறைபாடுகளைக் இனங்கண்டு சரி செய்திருப்பார்கள். எவ்வாறாயினும் இன்று நாட்டில் காணப்படும் உள்ளூராட்சி சபைகளுக்கு உறுப்பினர்கள் இல்லாமல் இருப்பதால் பரிபாலனம் செய்வதற்கு முடியாமல் போயுள்ளது. – என்றார்.
கருத்துக்களேதுமில்லை