டிஜிற்றல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு இலங்கையர் அனைவருக்கும் கிடைக்கவேண்டும்!  ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

டிஜிற்றல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு இலங்கையர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதற்குரிய அடிப்படை டிஜிற்றல் உட்கட்டமைப்பு வசதிகளை தனியார் துறையின் தனிப்பட்ட முதலீடுகள் மூலம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதோடு, தனியார் துறையினருக்கு கிட்டாத வாய்ப்புக்களில் அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும் என்பதே தன்னுடையதும் அரசாங்கத்தினதும் நிலைப்பாடாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், குறைந்தளவான வளங்களைக் கொண்டுள்ள தருணத்திலேயே, டிஜிற்றல் மயமாக்கலுக்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் செய்துகொள்ள வேண்டியிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொழும்பு ஷங்ரீலா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாடு 2023 இல் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘நிலையான டிஜிற்றல் சமூகத்தை நோக்கி – 2030 டிஜிற்றல் பொருளாதாரம்’ என்ற தொனிப்பொருளின் கீழ், இலங்கை கனிணி சங்கம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்திருந்த இரு நிகழ்வில் உள்நாட்டு, வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

2030 இலங்கையின் பொருளாதாரத்தை முழுமையாக டிஜற்றல் மயமாக்குவதற்கான துறைசார் நிபுணர்கள் மற்றும் அறிவியலாளர்களால் 6 துறைகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட இலங்கையில் ‘டிஜிற்றல் வழிக்காட்டல் வரைவு இனை தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கி வைத்தார்.

அதேபோல் விவசாய நவீனமயப்படுத்தலுக்காக விவசாய அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு இணைந்து, விவசாய மற்றும் தொழில்நுட்ப துறைசார் நிபுணர்களின் பங்களிப்புடன் தயாரித்திருக்கும் ‘ மேம்படுத்தப்பட்ட விவசாய மாற்றம் என்ற அறிக்கையை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார்.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், பட்டப்பின் பட்டதாரிகள், வியாபாரிகள் மற்றும் பேராசிரியர்கள், கல்வியியலாளர்கள் உள்ளிட்ட மட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தகவல் தொழில்நுட்ப துறைசார் ஆய்வுகளுக்கான விருதுகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க –

மனித வள அபிவிருத்தி துறையில் அனைத்து விடயங்களையும் நாம் உள்வாங்கியுள்ளோம். அடுத்ததாக மனிதவள மூலதனத்தை எவ்வாறு பெற்றுக்கொடுப்பது என்ற பிரச்சினை எழுந்துள்ளது. இன்று இங்கு முன்மொழியப்பட்ட இரு அறிக்கைகளையும் செயற்படுத்தும் முன்பாக அது தொடர்பாக ஆராய்ந்து பேச்சுகளை நடத்த எதிர்பார்க்கிறோம்.

மனித மூலதனத்தை போன்றே டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக்கொள்வதும் சவாலாகியுள்ளது. அதேபோல் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் குறைந்தளவான வளங்களுடனேயே நாம் டிஜிற்றல் வசதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

அதனால் தனியார் துறையினரின் தனிப்பட்ட முதலீடுகள் வாயிலாக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். தனியார் துறையால் அடைந்துகொள்ள முடியாத விடயங்களில் அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும்.

அதற்கமைய டிஜிற்றல் வசதிகள் தொடர்பிலான எமது கொள்கை மேற்படி விடயத்தை மையப்படுத்தியதாக நடைமுறைப்படுத்தப்படும். அதேபோல் மேல் மாகாணத்தின் கம்பஹா, கொழும்பு, களுத்துறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது. அதன் பின்னர் அதிக சனத்தொகை கொண்ட பகுதிகள் மற்றும் நகரங்களை நோக்கி நகர வேண்டும். அதேபோல் டிஜிற்றல் உட்கட்டமைப்பு வசதிகளை விநியோகிப்பவர்களும் முதலீடுகளை எதிர்பார்த்துள்ளனர்.

அதேபோல் முதலீடுகளை முன்னோக்கிக் கொண்டுச் செல்லும் இயலுமை அரசாங்கத்திடம் உள்ளது.  அதற்குரிய டிஜிற்றல் உட்கட்டமைப்பு வசதிகளை நாம் பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும். அதன் முதல் அத்தியாயத்துக்காக தனியார் துறைமீது தங்கியிருக்க வேண்டிய அதேநேரம், அதனால் 40 – 50 சதவீதம் வரையிலான சனத்தொகைக்கு போதியளவான உட்கட்டமைப்பு வசதிகள் கிட்டும். அதனை விரைவில் 60 சதவீதமாக அதிகரித்துக்கொள்ளவும் முடியும். அதன் பின்னர் படிப்படியாக முன்னேற்றிச் செல்ல முடியும்.

அடுத்ததாக நிதித்துறையின் மூலதனத்தை பெற்றுக்கொள்ளும் இயலுமை தொடர்பில் ஆராய வேண்டும். போதியளவு மூலதனம் உள்ளமையை உறுதிப்படுத்தவே நாம் வங்கிகளை மறுசீரமைப்புச் செய்ய ஆரம்பித்துள்ளோம். அதனால் மிஞ்சும் நிதியை குறித்த துறைக்காகப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.

அதனால் தற்போதுள்ளதை விடவும் மாறுபட்ட நிதித்துறை ஒன்று எமக்கு அவசியப்படுகிறது. செல்வந்தர்கள் மற்றும் வறியவர்களுக்கு இடையில் டிஜிற்றல் தொடர்பாடல் ஒன்று இருக்க முடியாது. அதனை நாம் நனவாக்கி கொள்வது எவ்வாறு என்பதை சிந்திக்க வேண்டும். அந்த வகையில் நாட்டின் டிஜிற்றல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் இயலுமை சகலருக்கும் கிட்ட வேண்டும்.

நீதிக் கட்டமைப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் பலவும் உள்ளன. சில விடயங்களை அரசாங்கத்தினாலும், சில விடயங்களை தனியார் துறையினாலும் செய்ய முடியும். அத்தோடு டிஜிற்றல் உட்கட்டமைப்பு, மூலதன நிதியாக்கம் மற்றும் டிஜிற்றல் அடிப்படையிலான தொடர்புகள் உள்ளிட்ட மூன்று பிரதான விடயங்களும் உள்ளன. அதனாலேயே டிஜிற்றல் மயமாக்கலுக்கான முன்னோடிச் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. – என மேலும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்விற்கு அழைத்தமைக்காக நன்றி தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.