மலையகத்தில் எந்தவோர் உதவிகளை வழங்கவும் மலையக அரசியல்வாதிகள் அனுமதிக்கிறார்களல்லர்! சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வேதனை

‘நாம் விளையாட்டுத்துறை சார்ந்தோ அல்லது வேறெந்த விடயங்களிலோ உதவிகளை வழங்க மலையக அரசியல்வாதிகள் அனுமதிப்பதில்லை. ஒரு மைதானத்தில் எதைச் செய்வதானாலும், அங்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் பாடசாலைகளின் கல்விப் பணிப்பாளர்களினது அனுமதி வேண்டும். எனினும், அவர்களின் அனுமதி கிடைக்காது. அனுமதி பெறுவதும் மிகக் கடினம்’ என மலையகத்தில் விளையாட்டுத்துறையை முன்னேற்றுவதில்  உள்ள குறைபாட்டை சுழற்பந்து வீச்சாளர், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் சுட்டிக்காட்டினார்.

முத்தையா முரளிதரன் தனது கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்களை வீழ்த்திய சாதனையை, அவரது வாழ்க்கைப் பின்னணியோடு எடுத்துக்காட்டும் விதமாக தமிழ்நாட்டின் அறிமுக இயக்குநர் ஸ்ரீPபதி இயக்கிய ‘800’ திரைப்படம் வெளியாகியுள்ளது.

கடந்த புதன்கிழமை மாலை இந்த படத்தில் பணியாற்றிய இலங்கை கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் முத்தையா முரளிதரன் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் பகிர்ந்துகொண்ட விடயங்களில் சிறு பகுதி –

1995இல் மக்களின் ஆதரவு : ‘ஜாதி, மதம், இனம் பார்க்காமல் என்னை ஆதரித்த இலங்கை மக்கள்’

”800′ திரைப்படம் தானாக உருவாக்கப்பட்ட ஒரு படம். அதைவிடுத்து, நானாக சென்று இப்படியொரு படத்தை உருவாக்கும்படி யாரிடமும் கேட்கவில்லை.

எனக்கு 21 வயதிருக்கும்… 1995 இல் நான் இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்தபோது பெரியளவில் ஆஸ்திரேலியாவிலிருந்து எதிர்ப்புகள் வந்தன. அந்த காலப்பகுதியில் அர்ஜுன ரணதுங்க ஒரு தந்தை போல் என்னை அரவணைத்தார். அதேபோல அணியில் இருந்த அனைவரும் என்னை ஒரு சகோதரனாக நினைத்து அக்கறை காட்டினர். எவரும் நான் தமிழரா, சிங்களவரா, முஸ்லிமா என்றெல்லாம் பார்க்கவில்லை. ஒரு கிரிக்கெட் வீரராகவும் இலங்கையராகவும்தான் பார்த்தனர்.

அன்றைக்கு இலங்கை மக்கள் எல்லோரும் ஜாதி, மதம், இனம் பார்க்காமல் எனக்கு ஆதரவளித்தனர். மக்களினதும் அர்ஜுனவினதும் ஆதரவு கிடைக்காமல் போயிருந்தால், இன்று என்னால் இப்படி பேசிக்கொண்டிருக்க முடியாது.

எந்தவொரு விடயத்திலும், தனி நபரால் சாதித்துவிட முடியாது. அவ்வாறு தனித்து சாதித்தேன் என்று யாராவது சொன்னால், அது பொய். ஏனென்றால், நாம் மக்கள் மத்தியில் வாழ்பவர்கள். மக்களின் ஆதரவு நமக்குத் தேவை.

1995 காலப்பகுதியில் இலங்கையில் யுத்தம் நடைபெற்றபோது மக்கள் வாழ்வதற்கு கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டனர். அவர்களுக்கு இருந்த சிரமங்களையும் கருத்திற்கொள்ளாமல் அப்போதும் கூட மக்கள் எனக்கு ஆதரவளித்தனர். அதற்கு நன்றிக்கடனாக, மக்களுக்கு உதவிகள் செய்யும் நோக்கத்தில் மூன்று வருடங்கள் கழித்து, 1998இல் நற்குண மன்றத்தை ஆரம்பித்தோம்.

கிட்டத்தட்ட 10 ஆயிரம் ஏழை மாணவர்களுக்கு கல்வி மற்றும் பிற உதவிகளைச் செய்துவந்தோம். சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெற்கில் ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுத்தோம். வடக்கு பகுதிகளுக்கு எங்களால் செல்ல முடியவில்லை.

எனினும், நான் உணவுத் தூதுவராக இருந்தபோது வடக்கிற்கும் சென்று அங்குள்ள மக்களின் நிலைமையைக் கண்டறிந்துள்ளேன்.

800 இல் இலங்கை கலைஞர்கள் : ‘நமது கலைஞர்களின் பங்களிப்பு மிகப் பெரிது!’

”800′ படத்தில் இலங்கை கலைஞர்கள் பலர் நடித்திருக்கிறார்கள். சிலருக்கான காட்சிகள் குறைவாக இருப்பதால் அதில் அவர்களது தனித்துவமான நடிப்புத் திறமையை சரிவர வெளிப்படுத்த முடியாமலும் போயிருக்கலாம். எனினும், இந்தப் படத்தில் நமது கலைஞர்களின் பங்களிப்பு மிகப் பெரிது.

இந்த படத்தைப் பாகுபாடு பார்க்காமல் பாருங்கள். ஏனென்றால், ஒரு மனிதன் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள், அதை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை இந்த படத்தில் காட்டியிருக்கிறார்கள்.

இது வெறுமனே கிரிக்கெட் படம் அல்ல. விளையாட்டு, கிரிக்கெட் சார்ந்த ஒரு படமாக இருந்தாலும், நமது நாட்டின் அப்போதைய நிலைமை என்ன என்பதை எனது பார்வையில் பட்டதை, உண்மையை, நான் பார்த்தவற்றை படத்தில் காண்பித்துள்ளனர்.

இதில் சில வன்செயல் காட்சிகள் வருகின்றன. ஒருவேளை அவை சிங்கள மக்களைப் பாதிக்கலாம். அதற்காக, அவற்றை எடுத்துக்காட்டாமல் இருக்க முடியாது.

படத்தில் வரும் எந்த காட்சியையும் இந்தியாவில் தணிக்கை செய்யவில்லை. இங்கே சில, நீக்கப்பட்டன. எனினும், இந்தியாவில் காட்சிகள் அகற்றப்படவில்லை. அத்தோடு, சான்றிதழ் வழங்கி படம் அங்கீகரிக்கப்பட்டது.

கோடிக்கணக்கில் உழைக்க வாய்ப்பில்லாவிட்டாலும், விருதுகளை வெல்லக்கூடிய திரைப்படமாக ‘800’ காணப்படுகிறது.

‘800’ இறுதிக் காட்சி : ‘என்னை அறியாமலே‍யே கண்ணீர் வந்துவிட்டது’

‘எல்லா காட்சிகளும் அருமை. கடைசிக் காட்சியில் இனி டெஸ்ட் மெட்ச் விளையாடத் தேவையில்லை என்கிற அளவுக்கு 800ஐ நிறைவு செய்த உணர்வு எழுந்தது. நான் எளிதில் அழமாட்டேன். நான் மிக வலிமையான ஒருவர். என்றாலும், அந்த நொடியில் என்னை அறியாமலே‍யே கண்ணீர் வந்துவிட்டது. அந்த காட்சியை மதுர் மிட்டல் அருமையாக தன் நடிப்பில் வெளிப்படுத்தியிருந்தார்.

எதிர்கொண்ட விமர்சனங்கள் : ‘யோசிக்காமல் எதையாவது சொல்லிவிடுவேன்… நானும் மனிதன்தானே!’

நான் விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரே விமர்சனங்களை எதிர்கொண்டேன். அதற்கு முன் எந்த விமர்சனமும் இருக்கவில்லை. நான் யார் சார்பாகவும் பேசுவதில்லை. பிரபலமானவர் என்பதால் என்னை யார் அழைத்தாலும், போய்த்தான் ஆகவேண்டும். மறுக்க முடியாது.

நான் ஒளிவுமறைவு இல்லாமல் பேசுபவன். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவ்வப்போது மன நிலைகள் மாறும்போது, உணர்வுகளும் மாறிமாறி வெளிப்படவே செய்யும். அத்தகைய தருணங்களில் யாரேனும் என்னிடம் கேள்வி கேட்டால், யோசிக்காமல் எதையாவது சொல்லிவிடுவேன். நானும் மனிதன்தானே! நானும் பிழை செய்யலாமல்லவா! ஆனாலும், மறுநாளே அது பிழை என உணர்ந்துவிடக்கூடிய பக்குவத்தை ஹொஸ்டல் வாழ்க்கை எனக்கு கற்றுத் தந்துள்ளது.

மலையகமும் கிரிக்கெட் விருத்தியும் : ‘நாம் உதவிகளை வழங்க மலையக அரசியல்வாதிகள் அனுமதிப்பவர்களல்லர்…’

‘மலையகத்தில் ஒரு தனிநபரால் எதையும் செய்துவிட முடியாது. அதுவும் அரசியல் தொடர்பின்றி எதுவும் செய்ய முடியாது. நானும் நிறையப் பார்த்துவிட்டேன்.

எமது நான்கு ‍சேவை நிலையங்களின் மூலமாகவும் கிரிக்கெட், விளையாட்டுத்துறை சார்ந்ததாக அன்றி, கல்வி மற்றும் ஏனைய தேவைகளைக் கருத்திற்கொண்டு உதவிகளை செய்து வருகிறோம்.

ஆனால், நாம் விளையாட்டுத்துறை சார்ந்தோ அல்லது வேறெந்த விடயங்களிலோ உதவிகளை வழங்க மலையக அரசியல்வாதிகள் அனுமதிப்பவர்களல்லர்.

ஒரு மைதானத்தில் எதைச் செய்வது என்றாலும், அங்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் பாடசாலைகளின் கல்விப் பணிப்பாளர்களினது அனுமதி வேண்டும். எனினும், அவர்களின் அனுமதி கிடைக்காது. அனுமதி பெறுவதும் மிகக் கடினம்.

பாடசாலை கல்விப் பணிப்பாளர்களும் அரசியலோடு தொடர்புபட்டவர்களே!

மைதானங்கள் மாநகர சபைக்கு சொந்தமானவை. மாநகர சபை அரசுக்கு சொந்தமானது. ஆகவே, அந்த மைதானங்களில் எதை செய்வதற்கும் அனுமதி கிடைப்பதில்லை. நாங்களும் முயற்சி செய்து பார்த்துவிட்டோம்.

நுவரெலியா, குதிரை பந்தயத் திடலில் கூட முயற்சி செய்து பார்த்தோம். அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை.

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு நாங்கள் விக்கெட் செய்துகொடுத்தோம். அவ்வாறே நாடெங்கிலும் 60 ஃ 80 சிமென்ட் விக்கெட்களை செய்து கொடுத்துள்ளோம். இதுபோன்று மலையகத்தில் செய்வதற்கு எங்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை.

ஆகவே, தனிநபராக சென்று உதவிகளை செய்ய முடியாவிட்டாலும், மன்றத்தினூடாக உதவித்திட்டங்களை முன்னெடுக்க முடியும். ஆகவே, மலையகத்தில் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்கள் நற்குண மன்றத்துடன் தொடர்புகொண்டால் நிச்சயம் வாய்ப்புகள் வழங்கப்படும்.

இளம் கிரிக்கெட் வீரர்களின் மனநிலை : ‘கோச் சொல்வதை இன்றைய பிள்ளைகள் கேட்பதில்லை…’

‘ஒரு கிரிக்கெட் வீரரை உருவாக்க எனக்குத் தெரியாது…’

நான் தற்போது ஹைதராபாத் சன்ரைசஸ் அணியில் பயிற்சியாளராக உள்ளேன். நாங்கள் அன்றைக்கு வளர்ந்த சூழ்நிலை வேறு. இப்போதைய பிள்ளைகள் வளரும் சூழல் வேறு. நாங்கள் ஆசிரியருக்கு பயந்து கற்றோம். ஆனால், இன்றைய பிள்ளைகளுக்கு பயமே இல்லை. பிள்ளைகளை ஆசிரியர்கள் தொடவே முடியாதபடி விதிமுறைகள் உள்ளன.

கிரிக்கெட்டிலும் இதுதான் நிலைமை. பயிற்சியாளர் (கோச்) சொல்வதை இன்றைய பிள்ளைகள் கேட்பதில்லை.

அதைப்போல நான் சொல்வதையும் கிரிக்கெட் பயிலும் இளையவர்கள் கேட்பதில்லை. இந்தியாவில் சிலர் என்னிடம் வந்து அறிவுரை கேட்டாலும், இலங்கையில் அவ்வாறில்லை.

நான் பேசுகின்றமை சமூக ஊடகங்களில் பதிவிடப்படும்போது, என்னை தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்க்கிறார்கள்.

ஒருவரை பிடித்துவிட்டால் போற்றுவதும், பிடிக்காவிட்டால் திட்டித் தீர்ப்பதுமான நிலைமைக்கு சமூக ஊடகங்கள் வந்துவிட்டன.

அத்தோடு, இன்றைய இளம் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் தமக்கு வரும் லைக்குகள் , புகழ்ச்சிகளை பற்றி மட்டுமே சிந்தித்து, தமது திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், அவற்றை வெளிப்படுத்தவும் தவறிவிடுகிறார்கள். இந்த நிலையை எப்படி மாற்றுவது என்றே எனக்குத் தெரியவில்லை.

தற்போது நிறைய கிரிக்கெட் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். எனது பயிற்சியாளர்கள் என்னை ஒரு கிரிக்கெட் வீரராக்கியமை போல, என்னால் அடுத்ததொரு கிரிக்கெட் வீரரை உருவாக்க முடியாது. காரணம், முறையான பயிற்சியளித்து ஒரு கிரிக்கெட் வீரரை உருவாக்க எனக்குத் தெரியாது என்பதே உண்மை.

இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு சிறு அறிவுரை : ‘சிறிய கிளப்களில் இணைந்து விளையாடினால் வாய்ப்புகள் வரும்…’

‘சிறிய கழகங்களில் இணைந்து விளையாடினால் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். நிறைய போட்டிகளில் பங்குபற்ற முடியும். அதன் மூலம் உங்கள் பெயர் வெளியே தெரியவரும்.

பிரச்சினைகளை எதிர்கொள்வது எப்படி? முரளிதரன் மொழிகள் : ‘இன்னல்களை எதிர்க்கும் சக்தி, விடாமுயற்சி வேண்டும்…’

வாழ்க்கையில் பிரச்சினைகள், இன்னல்கள் மாறிமாறி வந்துகொண்டேதான் இருக்கும். அதை நினைத்து கவலைப்படாமல், பிரச்சினைகளை எதிர்த்து, அவற்றை கடந்து வரவேண்டும்.

அமைதியாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும். அவசரத்திலும் குழப்பத்திலும் இருக்கும்போது எந்தவொரு முடிவையும் எடுக்கக்கூடாது. சற்றே அமைதியான மனநிலைக்கு திரும்பிய பின்னரே முடிவெடுக்க வேண்டும்.

எந்த இன்னலையும் எதிர்க்கும் சக்தி, விடாமுயற்சி வேண்டும்.

எப்போதும் வாழ்க்கையில் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்க முடியாது. தோல்விகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனூடாகவே தோல்விகளை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பதை கற்றுக்கொள்ள முடியும்.

நான், 19 வயதுக்குட்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் சேர்வதற்கே நான்கு வருடங்களானது. ஆனாலும், நான் என் முயற்சியைக் கைவிடவில்லை.

பாடசாலைகள் கிரிக்கெட் போட்டியில் விளையாட என்றைக்காவது எனக்கொரு வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தேன்.

வருடங்கள், காலங்கள் கடந்தாலும் முயற்சிப்பதை நிறுத்திவிடக்கூடாது…’ என வருடங்கள் கடந்தும் தன்னம்பிக்கை குறையாமல் இளையோருக்கு உற்சாகமூட்டும் வகையில் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.