போலிச் செய்திகள், தவறான தகவல்களை கையாள்வதற்கு பிரத்தியேகசட்டம் அவசியம் ஆணையாளர் பிரதிபா மஹநாமஹேவா கருத்து
கனேடிய பிரதமரால் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட இனப்படுகொலை குற்றச்சாட்டு, பின்னர் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சாலேயே மறுக்கப்பட்டாலும் அது மிகவேகமாகப் பரவிவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹநாமஹேவா, தனியுரிமைசார் தகவல்கள் மற்றும் கருத்துச்சுதந்திரம் என்பன பாதுகாக்கப்படும் அதேவேளை போலியானதும் தவறானதுமான தகவல்களை உரியவாறு கையாள்வதற்கான பிரத்யேக சட்டம் உருவாக்கப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தெற்காசிய சிந்தனைக் குழாம்களின் ஒன்றியத்துடன் இணைந்து தேசிய சமாதானப்பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘சர்வதேச தொடர்புகளில் போலிச்செய்தி, தவறான தகவல் மற்றும் பரப்புரை’ எனும் புத்தக வெளியீட்டு நிகழ்வு கொழும்பிலுள்ள ரேணுகா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ‘சர்வதேச தொடர்புகளில் போலிச்செய்தி, தவறான தகவல் மற்றும் பரப்புரை குறித்த இலங்கையின் அனுபவங்கள்’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழு ரீதியான கலந்துரையாடலில் பங்கேற்று, கருத்து வெளியிடுகையிலேயே பேராசிரியர் பிரதிபா மஹநாமஹேவா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவால் கடந்த மேமாதம் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட ‘இனப்படுகொலை’ குற்றச்சாட்டு மற்றும் பிரதமரின் கருத்தை மறுத்ததுடன் ‘இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றமைக்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை’ என கனேடிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட கருத்து ஆகியவற்றையும், இலங்கையிலுள்ள சுவிற்ஸர்லாந்து தூதரக ஊழியர் கானியா பானிஸ்டர் பிரான்சிஸினால் முன்வைக்கப்பட்ட கடத்தல் குற்றச்சாட்டு மற்றும் அவ்வாறு தவறான குற்றச்சாட்டை முன்வைத்ததாக அவர் மேல்நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்டமையையும் தவறான தகவல்களுக்கான உதாரண சம்பவங்களாகக் குறிப்பிட்ட பிரதிபா மஹநாமஹேவா, அவை தவறான தகவல்கள் என நிரூபணமாவதற்கு முன்பதாகவே பொதுவெளியில் வேகமாகப் பரவிவிட்டதாக சுட்டிக்காட்டினார்.
எனவே இத்தகைய தவறான தகவல்கள், போலிச்செய்திகளைக் கையாள்வதற்கு இலங்கைக்கென பிரத்தியேகமானதொரு சட்டம் அவசியம் எனவும், இருப்பினும் அந்தச்சட்டம் தகவல் அறியும் உரிமை மற்றும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் அமையவேண்டும் எனவும் வலியுறுத்திய அவர், தவறான தகவல்கள் மற்றும் போலிச்செய்திகளைக் கையாள்வதற்கு சர்வதேச நாடுகள் பலவற்றிலும் நடைமுறையில் உள்ள சட்டங்களை மேற்கோள் காண்பித்தார்.
‘தற்போது நடைபெற்றுவரும் இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலில் ஹமாஸ் உறுப்பினர்கள் அனைவரும் கொல்லப்படுவர் என்று இஸ்ரேலிய பிரதமர் கூறுகின்றார். இவ்வாறானதொரு கருத்தை இலங்கையின் தலைவர் கூறியிருந்தால் என்ன நேர்ந்திருக்கும்? இது மனித உரிமை மீறல் என சர்வதேச மட்டத்தில் கண்டனங்கள் எழுந்திருக்கும். ஆனால் இவ்வாறு கூறுகின்றமை இஸ்ரேல் என்பதால் எதுவும் நடக்கவில்லை. ஆகவே இவ்விடயத்தில் சர்வதேச அரசியல் எவ்வாறு இயங்குகிறது என்றும் பார்க்கவேண்டும்’ என பிரதிபா மஹநாமஹேவா சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று ‘விக்கிலீக்ஸ்’ ஜுலியன் அஸாஞ்சே, எட்வேட் ஸ்னோடன் ஆகியோரால் சர்ச்சைக்குரிய உண்மைகள் வெளியிடப்பட்ட சம்பவத்தை மேற்கோள்காட்டிய அவர், உண்மைகள் வெளிப்படுத்தப்படவேண்டிய அதேவேளை தனியுரிமைசார் தகவல்கள் பாதுகாக்கப்படவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.
மேலும், ‘உத்தேச நிகழ்நிலைக்காப்பு சட்டமூலத்தின்கீழ் பிரத்தியேக ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படவேண்டுமா? அல்லது சமூகவலைத்தளப் பயன்பாடு குறித்த வழிகாட்டல்கள் உருவாக்கப்படவேண்டுமா? என்பது பற்றி நாம் சிந்திக்கவேண்டும். அண்மைய காலங்களில் சமூகவலைத்தளங்களில் பல்வேறு நிதித்திட்டங்கள் தொடர்பான பொய்யான தகவல்கள் வெளியாகிவருவதுடன், அவற்றின் மூலம் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள். எனவே தனியுரிமைசார் தகவல் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் என்பன பாதுகாக்கப்படுவதைப்போன்று தவறான தகவல்களால் பாதிக்கப்படும் தரப்பினரும் பாதுகாக்கப்படவேண்டும்’ என்றும் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.
அத்தோடு, அண்மையில் ‘சனல்-4’ செய்திச்சேவையால் உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட காணொளியின் உள்ளடக்கம் குறித்து மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே பிரித்தானிய ஊடக ஒழுங்குபடுத்தல் சபையிடம் முறைப்பாடு அளித்திருக்கிறார் எனவும், அதன்மூலம் இதுபற்றி விசாரணைகள் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை