உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படாதது ஏன்? பேராசிரியர் செல்வகுமாரன் தெரிவிப்பு
அரசாங்கம் மற்றும் அரச கட்டமைப்புக்களிடமிருந்து நம்பகத்தன்மைவாய்ந்த உண்மையான தகவல்கள் வெளிவராதபோது போலியானதும், தவறானதுமான தகவல்கள் உருவாவதாக சுட்டிக்காட்டியுள்ள பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரும், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட முன்னாள் பீடாதிபதியுமான பேராசிரியர் என்.செல்வகுமாரன், உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான முன்னைய விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்தப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தெற்காசிய சிந்தனைக் குழாம்களின் ஒன்றியத்துடன் இணைந்து தேசிய சமாதானப்பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘சர்வதேச தொடர்புகளில் போலிச்செய்தி, தவறான தகவல் மற்றும் பரப்புரை’ எனும் புத்தக வெளியீட்டு நிகழ்வு கொழும்பிலுள்ள ரேணுகா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ‘சர்வதேச தொடர்புகளில் போலிச்செய்தி, தவறான தகவல் மற்றும் பரப்புரை குறித்த இலங்கையின் அனுபவங்கள்’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழு ரீதியான கலந்துரையாடலில் பங்கேற்று, உரையாற்றுகையிலேயே பேராசிரியர் செல்வகுமாரன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது –
பொதுமக்களுக்கு சரியான தகவல்களை வழங்கவேண்டிய பொறுப்பில் உள்ள அரசாங்கத்திடமிருந்து நம்பகத்தன்மைவாய்ந்த தகவல்கள் வெளிவராதபோது போலிச்செய்திகளும், தவறான தகவல்களும் உருவாகின்றன. பொதுவெளியில் பகிரப்படும் தவறான தகவல்கள் மக்களால் நம்பப்படுகின்றன.
குறிப்பாக உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்கள் தொடர்பில் ‘சனல்-4’ செய்திச்சேவையால் அண்மையில் வெளியிடப்பட்ட ஆவணப்படம் சர்ச்சைக்குரிய பேசுபொருளாக மாறியிருக்கின்றது. ஆனால் அந்தத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் பொதுமக்கள் பார்வையிடக்கூடியவகையில் பகிரங்கப்படுத்தப்படவில்லை. அதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்தவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது.
அதேபோன்று மேற்குறிப்பிட்ட ஆவணப்படம் வெளியானதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் மீண்டுமொரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறெனில் முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் அவற்றால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மீது ஜனாதிபதி நம்பிக்கை இழந்திருக்கின்றாரா? என்ற கேள்வி எழுகிறது.
இவையனைத்தும் ஆட்சியியல்சார் நெருக்கடிகளையே காண்பிக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பதாகவே நாட்டின் அரசசேவை அரசியல்மயப்படுத்தப்பட்டதாக மாறியிருக்கின்றது. அரசசேவையில் ஈடுபடும் ஊழியர்கள் ‘அரச’ ஊழியர்களாகவன்றி, ‘அரசாங்க’ ஊழியர்களாக மாறியிருக்கின்றார்கள். குறிப்பாக 2019 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் ஆட்சிபீடமேறியவுடன் உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டனர் என வெளியான செய்திகளை அதற்கு உதாரணமாகக் கூறமுடியும்.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது அரசசேவையின் முதுகெலும்பை நிமிர்த்துவது என்பது மிகக்கடினமானதாக இருப்பதாக நான் உணர்கிறேன். பெரும்பாலான அரச ஊழியர்கள் திறமை அடிப்படையிலான நேர்மையான பதவி உயர்வைப் பெறுவதில்லை என்பதால், அவர்கள்மீது மக்கள் நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள். அதனால் அவர்களால் வெளியிடப்படும் தகவல்களை மக்கள் நம்புவதில்லை. எனவே முதலில் அரச கட்டமைப்புக்கள் மற்றும் அரசசேவையின் சுயாதீனத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.
அடுத்ததாக அனைவருக்கும் பாதுகாப்பான இணையவெளியை உறுதிப்படுத்துவது அவசியம். இருப்பினும் அதனை முன்னிறுத்தி தற்போது அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள நிகழ்நிலைக்காப்பு சட்டமூலத்தின் சில உள்ளடக்கங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதேபோன்று அந்தச் சட்டமூலத்தின் உள்ளடக்கம் தவறானமுறையில் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தவேண்டியதும் இன்றியமையாததாகும் என்று வலியுறுத்தினார்.
கருத்துக்களேதுமில்லை