ஐ.தே.க. எந்த பதவியிலும் மாற்றம் செய்யக் கூடாது! கட்சி மத்திய குழுவில் தீர்மானம்
ஐக்கிய தேசிய கட்சியைப் படிப்படியாக முன்னுக்கு கொண்டுவருவதற்காகக் கட்சியின் தற்போதைய தலைவர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவந்துள்ளனர். இந்த வேலைத்திட்டங்களைத் தொடர்ந்து அந்த தலைவர்கள் ஊடாகக் கொண்டுசெல்வதற்கான பலம் இருக்கிறது. அதனால் கட்சியில் தற்போது பதவி நிலைகளில் இருப்பவர்களை எந்த மாற்றமும் செய்யக்கூடாது என கட்சி மத்தியகுழுவில் தீர்மானிக்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் வியாழக்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கட்சி மத்திய குழு கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக தொடர்ந்து தெரிவிக்கையில் –
ஐக்கிய தேசிய கட்சி சம்மேளனம் எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் இடம்பெற இருக்கிறது. அது தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடவே கட்சி மத்திய குழு கூடி இருந்தது. இதன்போது சம்மேளனத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் கட்சி சம்மேளனத்தின்போது கட்சியின் பதவிகளில் மாற்றம் ஏற்படப்போவதாகவும் முக்கிய பதவிகளுக்கு புதியவர்களை நியமிக்கப்போவதாகவும் சமூகவலைத்தளங்களில் பிரசாரமாகி வருகின்றமை தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. கஷ்டமான நிலையில் கட்சியை படிப்படியாக முன்னுக்கு கொண்டுவருவதற்காக கட்சியின் தற்போதைய தலைவர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்துள்ளனர். இந்த வேலைத் திட்டங்களைத் தொடர்ந்து அந்தத் தலைவர்கள் ஊடாக கொண்டுசெல்வதற்கான பலம் இருக்கிறது. அதனால் கட்சியில் தற்போது பதவி நிலைகளில் இருப்பவர்களை எந்த மாற்றமும் செய்யக்கூடாது என பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
அதன் பிரகாரம் கட்சி பதவிகளில் தற்போதைக்கு எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை என மத்திய குழுவில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் கட்சி சம்மேளனத்தின் போது மேற்கொள்ளவேண்டிய விடயங்கள் தொடர்பில் முழுமையாக கலந்துரையாடி முடிவுக்கு வர முடியாமல் போனதால், மீண்டும் ஜனாதிபதி தலைமையில் கூடி கலந்துரையாட தீர்மானித்தோம். – என்றார்.
இதேவேளை, மத்திய குழு கூட்டத்தின்போது ரவி கருணாநாயக்கவுக்கு கட்சியின் பிரதித் தலைவர் பதவி அல்லது பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படவேண்டும் என முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது தற்போதைக்கு கட்சி பதவிகளில் எந்த மாற்றமும் செய்யவேண்டிய தேவை இல்லை என கட்சி சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் தவிசாளர் பதவிகளைத் தவிர ஏனைய அனைத்து பதவிகளையும் நீக்கிவிட்டு தலைமைத்துவ சபை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என இதற்கு முன்னர் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டிருந்ததுடன் அந்த பிரேரணையை செயற்படுத்தத் தேவையில்லை எனவும் மத்திய குழு கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை