ஆட்சியாளரைத் தெரிவுசெய்ய மக்களுக்கு உரிமையுள்ளது! சாகர காரியவசம் தெரிவிப்பு
தேர்தலைப் பிற்போடும் நிலைப்பாட்டில் பொதுஜன பெரமுன இல்லை என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில், நாம் தேர்தலை பிற்போட இடமளிக்கப் போவதில்லை.
உரிய காலத்திலோ அல்லது அதற்கு முன்போ தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு.
ஜனநாயக நாட்டில், தங்களுக்குத் தேவையான ஆட்சியாளரைத் தெரிவு செய்யவும் தங்களின் கருத்துக்களை வெளியிடவும் மக்களுக்கு முழு உரிமையுள்ளது.
இந்த உரிமையை இல்லாது செய்ய எந்தத் தரப்பினர் முற்பட்டாலும், நாம் அதற்கு ஆதரவளிக்கப் போவதில்லை.
எனவே, எந்த காரணத்தைக் கொண்டும் தேர்தலை பிற்போடும் நிலைப்பாட்டில் பொதுஜன பெரமுன இல்லை என்பதை கூறிக்கொள்கிறோம். – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை