போராட்டங்களை தோற்றுவிக்க ஜே.வி.பி. முயற்சி மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமாம்! மஹிந்தானந்த அளுத்கமகே கோரிக்கை
விடுதலை புலிகளுக்கு இணையான பயங்கரவாத அமைப்பாகவே மக்கள் விடுதலை முன்னணி நாட்டுக்கு அழிவை ஏற்படுத்தியது.நாடு வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் மக்களை குழப்பி மீண்டும் போராட்டத்தை தோற்றுவிக்க மக்கள் விடுதலை முன்னணியினர் முயற்சிக்கின்றனர். மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
நாவலபிட்டி நகரில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2019 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். கொவிட் பெருந்தொற்கு தாக்கத்தால் அரசாங்கம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டது. கொவிட் தாக்கம் இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல.
இலங்கை இறக்குமதி பொருளாதாரத்தை மாத்திரம் நம்பியுள்ளதால் கொவிட் பெருந்தொற்று தாக்கம் ஏனைய நாடுகளைக் காட்டிலும் இலங்கைக்கு நேரடியாகத் தாக்கம் செலுத்தியது. சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் வீழ்ச்சியடைந்ததால் வெளிநாட்டு கையிருப்பு பாதிக்கப்பட்டது.
வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையால் எரிபொருள், எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருள்கள் இறக்குமதி தடைப்பட்டன. 13 மணித்தியாலங்கள் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டன. இவ்வாறான நிலையில் நெருக்கடிக்குள்ளான மக்கள் ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மக்களின் போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியினரும் மக்கள் விடுதலை முன்னணியிரும் பயங்கரவாதப் போராட்டமாக மாற்றியமைத்து அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிவை இராஜினாமா செய்யும் அளவுக்கு பிரச்சினைகளைத் தீவிரமாக்கினார்கள்.
பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியான தீவிரமடைந்த சூழ்நிலையில் அரசமைப்பின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை இடைக்கால ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டோம். மாறுபட்ட அரசியல் கொள்கையை கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்படுகிறோம். எதிர்வரும் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் நாட்டுக்காக சிறந்த தீர்மானத்தை எடுப்போம்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைத் தொடர்ந்து நாடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.ஜனாதிபதியின் சீன விஜயம் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கு சாதகமாக அமையும். எதிர்வரும் மாதம் முதல் அத்தியாவசிய பொருள்களின் விலைகள் குறைவடையும். 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும்.
விடுதலைப் புலிகளுக்கு இணையான பயங்கரவாத அமைப்பாக மக்கள் விடுதலை முன்னணி செயற்பட்டு நாட்டுக்கு அழிவை ஏற்படுத்தியது.நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் மக்களை குழப்பி மீண்டும் போராட்டத்தை தோற்றுவிக்க மக்கள் விடுதலை முன்னணியினர் முயற்சிக்கின்றனர்.மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.தேர்தல் ஊடாகவே இனி ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்படும். – என்றார்.(
கருத்துக்களேதுமில்லை