பொதுக்கொள்கையுடன் ஒன்றிணைய வேண்டும்! எதிர்க்கட்சிகளுக்கு பீரிஸ் அறைகூவல்

நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதாகக் குறிப்பிட்டுக் கொண்டு 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை பிற்போட அரசாங்கம் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

2025 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தை திருத்தம் செய்யும் வகையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

தேர்தலை நடத்தாமல் நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இடமளிக்க முடியாது.நாட்டு மக்களின் வாக்குரிமையை வென்றெடுக்க சகல எதிர்க்கட்சிகளும் பொதுக் கொள்கை வகுப்புடன் செயற்பட ஒன்றிணைய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

பொருளாதாரப் பாதிப்பால் நாட்டு மக்கள் பெரும் துயரத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் மக்களின் கவனத்தை திசைத்திருப்பி விட்டு சுயநலமான செயற்பாடுகளை மிகவும் சூட்சமமான முறையில் முன்னெடுக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

தமக்கான அரசாங்கத்தை தெரிவுசெய்ய தமக்கு வாய்ப்பளிக்குமாறு மக்கள் வலியுறுத்துகின்ற நிலையில் அரசமைப்பு திருத்தம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் என்பன குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

நாட்டுக்கு பொருத்தமான அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இரத்து செய்யபப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் இவற்றை செயற்படுத்த மக்களாணை அத்தியாவசியமானது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தற்போதைய நாடாளுமன்றத்துக்கும் மக்களாணை கிடையாது என்பது முழு உலகமும் அறிந்த விடயம் 2020.08.03 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு பின்னர் இந்த நாட்டில் எமது அரசியல் பயணத்தில் இடம்பெறாத பல சம்பவங்கள் பதிவாகின.

69 லட்ச மக்களாணையுடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மக்கள் விரட்டியடித்தார்கள். மக்கள் போராட்டத்தால் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை பதவி விலகியது. ஆகவே, தற்போதைய நாடாளுமன்றத்துக்கு மக்களாணை சிறிதேனும் கிடையாது.

நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது இலகுவானதொரு விடயமல்ல. 1978 ஆம் ஆண்டு அரசமைப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை பிரதான அம்சமாகக் கருதப்பட்டது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை சுயாதீன ஆணைக்குழுக்கள், மாகாண ஆளுநர், அரசமைப்பின் 13 ஆவது திருத்தம், அமைச்சரவை, அரச நிர்வாகம், நீதிமன்ற கட்டமைப்பு ஆகிய விடயதானங்களுடன் நேரடியாகத் தொடர்புப்பட்டுள்ளது.

ஆகவே நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்ய வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன், நீதிமன்றத்தின் வழிகாட்டலுக்கு அமைய  மக்கள் வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்ய வேண்டும் என்ற உண்மை நோக்கம் ஜனாதிபதிக்கு காணப்படுமாயின் அவர் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை உடன் நடத்தி நிலையான அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

மக்களாணைக்கு செல்லாமல் அரசமைப்பில் வார்த்தை பிரயோகங்கள் ஊடாக திருத்தம் செய்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்தால் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறாது.

நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் 2025.08 ஆம் மாதத்துக்கு பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

பொதுத்தேர்தலையும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தை திருத்தம் செய்யும் வகையில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அமைச்சரவைக்கு யோசனை முன்வைத்துள்ளார்.

தேர்தல் சட்டத்தை திருத்தம் செய்யும் யோசனையை முன்வைத்து, பின்னர் அதனை ஆராய குழு நியமித்து தேர்தலை பிற்போடுவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறமையானவர். தேர்தல் சட்டம் திருத்தம் என்று குறிப்பிட்டுக் கொண்டு தான் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளன.இவ்வாறான நிலையே பொதுத்தேர்தலுக்கும் ஏற்படும்.

தேர்தலை பிற்போடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என பொதுஜன பெரமுன குறிப்பிடுகிறது.ஆனால் தேர்தலுக்கு தடையாக ஜனாதிபதி எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குகிறது.

மக்களாணை மீது உண்மையான மதிப்பு இருக்குமாயின் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் செயற்பாடுகளில் பொதுஜன பெரமுன பங்குதாரராக வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.