மலையக சமூகத்தை பிளவுபடுத்தும் நோக்கில் தேர்தலுக்கு வரும் போலிகளை நம்ப முடியாது! ராமேஷ்வரன் எச்சரிக்கை

”மலையகத்தில் சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசியல் வாதிகள் தடையாக உள்ளனர் என ஒருவர் (முத்தையா முரளிதரன்) கூறியுள்ளார். அவரை வரவேண்டாம் என சொன்னது யார்? மக்களுக்கு சேவை செய்ய முன்வாருங்கள், நாங்களே மாலைபோட்டு வரவேற்பளிக்கின்றோம்.” – என்று இ.தொ.காவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

ஆனால் தேர்தல் காலத்தில் வாக்குக்காக மட்டும் தானே எவரையாவது அழைத்துக்கொண்டு வருகின்றீர்கள், தேர்தல் முடிந்ததும் எங்களையும் கஷ்டத்தில் தள்ளிவிட்டு, காணாமல் போய் விடுகின்றீர்கள் எனவும் அவர் கூறினார்.

‘சிறுவர்களுக்கான கனவுகள்’ என்ற வேலை திட்டத்தின் கீழ் அவர்களின் நலன் கருதி பூண்டுலோயா பேர்லன்ஸ் தோட்டம் ஹெரோ பிரிவில், தலவாக்கலை லோகி தோட்டம், அக்கரகந்தை பெசிபன் தோட்டம், இராகலை பிரம்லி தோட்டம், இராகலை தோட்டம் மத்திய பிரிவு, இராகலை லிடஸ்டேல் தோட்டம் ஆகிய பகுதிகளில் நவீன தொழில்நுட்பம் கொண்ட சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரனின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது.

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் ஊடாக உலக வங்கியின் அனுசரணையுடனும், பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் நெறிப்படுத்தலின் கீழ் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் மேற்பார்வையில்,  நிறுவப்பட்ட நவீன தொழில்நுட்பம் கொண்ட சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் குழந்தைகளின் சுகாதாரம் கல்வி அபிவிருத்தி மற்றும் அவர்களுடைய ஆக்க திறன்களை விருத்தி செய்தல் போன்றவற்றை  இலக்காகக் கொண்டு  உருவாக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல், உப தலைவர் பிலிப், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி செயலாளர் எம்.எஸ்.செல்லமுத்து, நுவரெலியா பிரதேச சபை முன்னாள் தலைவர் வேலு யோகராஜ், பிரதேச சபை உறுப்பினர்கள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் நுவரெலியா மாவட்ட பணிப்பளார் ரஞ்சன் மற்றும் அதிகாரிகள், தோட்ட முகாமையாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், இளைஞர், யுவதிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு –

‘ மலையகத்தில் பல அரசசார்பற்ற நிறுவனங்கள் சேவைகளை முன்னெடுக்கின்றன, அவற்றுக்கு எவரும் தடை ஏற்படுத்தவில்லை. மலையகத்துக்கு சேவை செய்ய முன்வருபவர்களாக இருந்தால் நாம் நிச்சயம் வரவேற்போம். ஆனால் எமது சமூகத்தை பிளவுபடுத்தும் நோக்கில் தேர்தல் காலத்தில் மட்டும் வரும் போலிகளை நம்பமுடியாது. தோட்டப்பகுதிக்கு வந்து பார்த்தால்தான் காங்கிரஸ் முன்னெடுத்த சேவைகள் தெரியும். மக்களுக்கு தேவையான சேவைகளை அன்று முதல் இன்றுவரை காங்கிரஸ் வழங்கி வருகின்றது.

இந்த நிலையத்தை நிர்மாணிக்க அடிக்கல் நாட்டப்பட்டபோது ஒரு கோடி ரூபா மதிப்பிடப்பட்டது, ஆனால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமையால் ஏற்பட்ட மாற்றங்களால் அதனை முன்னெடுக்க இரண்டரை கோடி ரூபா தேவைப்பட்டது, அமைச்சு பதவியை ஏற்ற பின்னர் அதற்கான ஒதுக்கீடுகளை எமது அமைச்சர் ஜீவன் தொண்டமான் வழங்கியுள்ளார். விலை அதிகரிப்பு என்பதற்காக நாம் திட்டங்களைக் கைவிடவில்லை.

அதேபோல இந்தியா வழங்கவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டமும் முன்னெடுக்கப்பட்டது, அத்திட்டத்துக்கும் ஆரம்பத்தில் 9 லட்சம் ரூபா மதிப்பிட்டப்படது, பின்னர் 28 லட்சம் ரூபா தேவைப்பட்டது, அதற்கான ஒப்பந்தமும் அண்மையில் கைச்சாத்திடப்பட்டது. மேலும் பல திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடுகளை வழங்க எமது அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். எனவே, ஜனவரி ஆகும்போது திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கும்.

எமது சமூகத்துக்கு ஒற்றுமை அவசியம். மக்களுக்கான பொது பிரச்சினையின் போது இணைந்து செயற்பட தொழிற்சங்கங்கள் முன்வந்துள்ளன. அண்மையில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் இணக்கம் எட்டப்பட்டது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.