ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமலிருப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை தோற்கடிப்போம் – திஸ்ஸ அத்தநாயக்க
நாட்டிலுள்ள உண்மையான பிரச்சினைகளை மறைப்பதற்காக தேர்தல்கள் தொடர்பான செய்திகளை அரசாங்கம் சமூகமயப்படுத்திக் கொண்டிருக்கிறது. மறுபுறம் அடுத்த வருடம் உரிய நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமலிருப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகளை முறியடித்து நாம் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட மாட்டாது எனப் பரவிவரும் செய்தி தொடர்பில் அரசாங்கம் அதன் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நீதித்துறை அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்றத் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் யோசனையொன்றை முன்வைத்துள்ளார். ஆனால் இது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலோ அல்லது பாராளுமன்றத் தேர்தல் தொடர்பிலோ பேச வேண்டிய நேரம் இல்லை.
காரணம் மக்கள் நாளாந்தம் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் பாரிய போராட்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மறைத்து, தேவையற்ற பேருபொருளை அரசாங்கம் சமூகமயப்படுத்திக் கொண்டிருக்கிறது. எவ்வாறிருப்பினும் 2024 நவம்பரில் நிச்சயம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அரசாங்கத்தால் எந்தவொரு காரணத்தைக் கூறியும் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது. மாறாக தேர்தல் நடத்தப்படாவிட்டால் நாட்டில் அராஜக நிலைமை ஏற்படும்.
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே 2 ஆண்டுகளுக்கு தேர்தல் இல்லை என்று தெரிவித்துள்ளார். அவர்களால் தேர்தல் இன்றி முன்னோக்கிச் செல்ல முடியும். ஆனால் நாட்டு மக்கள் அதற்கு இடமளிக்கப் போவதில்லை. அத்தோடு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தேர்தலுக்கான நிதியை கட்டம் கட்டமாக வழங்குமாறு திறைசேரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எனவே ஜனாதிபதித் தேர்தலுக்கான நிதியை அடுத்த வருடத்துக்கான வரவு – செலவு திட்டத்தில் அரசாங்கம் ஒதுக்க வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தல் எந்த சந்தர்ப்பத்தில் நடத்தப்பட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தி அதற்கு தயாராகவே உள்ளது. தேர்தலைக் காலம் தாழ்த்தும் அரசாங்கத்தின் முயற்சிகள் அனைத்தையும் நாம் தோற்கடிப்போம். அடுத்த வருடம் நிச்சயம் நாம் ஆட்சியமைப்போம் என்றார்.
கருத்துக்களேதுமில்லை