பன்றிக்கு வைத்த பொறியில் சிக்கிய பெண் தொழிலாளி!
பன்றிக்கு வைக்கப்பட்ட பொறியில் சிக்கிய பெண் தொழிலாளி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூப்பனை தோட்டத்தில் தேயிலை மலையில் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த ‘அக்குபட்டாஸ்’ வெடித்து வயது பெண் தொழிலாளி ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பூப்பனை தோட்ட விளையாட்டு மைதானத்துக்கு அருகில் நூறு மீற்றர் தூரத்தில் காணப்படும் வீதியின் மேற்பகுதியில் உள்ள தேயிலை மலையில் இந்த வெடிப்பு சம்பவம் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக கந்தப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கோகில ஆரியதாஸ தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் தேயிலை மலையில் தொழில் செய்து கொண்டிருந்த 52 வயதுடைய பெண் தொழிலாளி தனக்கு ஒதுக்கப்பட்ட தேநீர் இடைவேளையின் போது தேநீர் அருந்திவிட்டு வெற்றிலை பாடுவதற்கு தேயிலை மலையில் உள்ள கல் ஒன்றில் பாக்கு உடைக்க முற்பட்டபோது அக் கல்லுக்கு கீழ் இருந்ததாக கூறப்படும் ‘அக்குபட்டாஸ்’ வெடித்து காயங்கள் ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும் இவ்வாறு வெடித்த வெடி ‘அக்குப்பட்டாஸ் ‘ என்று சொன்னாலும் இதில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இது தொடர்பாக பரிசோதணையும், விசாரணையையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், இந்த வெடி பன்றிக்கு வைக்கப்பட்டதாகவும் பூப்பனை மேல்பிரிவு தோட்ட தேயிலை மலைகளில் அதிகமான காட்டு பன்றிகள் நடமாடுகின்றன எனவும் இதனால் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை