இலங்கைத் தமிழர்’ என வலியுறுத்தும் சுற்று நிரூபம் எமது இன அடையாளத்தை அழிக்கும் செயற்பாடே!  அமைச்சர் ஜீவன் அதிருப்தி

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை ‘இலங்கைத் தமிழர்’ என அடையாளப்படுத்துவதற்கு முற்படுவதானது எமது மக்களின் இன அடையாளத்தை அழித்தொழிக்கும் செயற்பாட்டு முயற்சியாகும். எனவே, பதிவாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்தையும் அவரது இச்செயற்பாட்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

‘பிறப்புச் சான்றிதழ் உட்பட பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்துக்குரிய ஆவணங்களில் இனத்தைக் குறிப்பிடும் போது இந்திய தமிழ் ஃ சோனகர் என்பதை இலங்கைத் தமிழ்ஃ சோனகர்’ என பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் எனும் தலைப்பின்கீழ் பதிவாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபம் தொடர்பில் எமது அதிருப்தியையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது சம்பந்தாக ஜனாதிபதி மற்றும் விடயத்துக்கு பொறுப்பு அமைச்சரான பிரதமருடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு –

இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் விவகாரத்தில் பதிவாளர் நாயகத்தின் நிலைப்பாட்டுடன் எமக்கு உடன்பாடு கிடையாது.

எமது மக்களுக்கு 200 வருடகால வரலாற்று அடையாளம் உள்ளது. 200 ஆவது வருடத்தில் அந்த வரலாற்று அடையாளத்தை அழிப்பதற்கு சிலர் முற்படுகின்றனர்.

இது ஏற்கத்தகாத விடயமாகும். இது சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவுடனும் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுடனும் பேச்சு நடத்தி தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு முற்படுவோம்.

எமது மக்கள் போரிடவும் இல்லை, தனி நாடு கோரவும் இல்லை. தமக்கு தனியான அடையாளத்தையே கோருகின்றனர். அதனையும் அழிக்க முற்படுவது ஏற்புடையதல்ல.

இலங்கைத் தமிழர் என பதிவு செய்தால் அது எமது மக்களுக்கு பெரும் அநீதியாக அமைந்துவிடும். 30 வருடங்கள் பிரஜா உரிமை இல்லாமல் வாழ்ந்தோம். எமது தொழிலாளர்கள் அடிமைகள்போல் நடத்தப்பட்டனர். அது தற்போதும் தொடர்கிறது.

தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கான நகர்வுகளும் இல்லை. எமக்கு எமது அடையாளம் வேண்டும். எனவே, பதிவாளர் நாயகத்தின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது. அதனை நாம் எதிர்ப்போம். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.