மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பிரதீவன் ‘ அச்சுறுத்தலுக்குள்ளானமை கண்டிக்கத்தக்கது!  சிறிதரன் கடும் விசனம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழரின் உரிமைகள்,தமிழ் தேசம் தொடர்பில் குரல் கொடுக்கும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுகிறார்கள். மனித உரிமைகள் செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுகின்றமை வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நீதித்துறைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டில் நீதி உள்ளதா, நீதிமன்றங்களின் கட்டளைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா, நீதிபதிகள் மற்றும் குடிமக்கள் பாதுகாக்கப்படுகிறார்களா ? என்பது சந்தேகத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையின் முன்னேற்றம் குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். நீதி இல்லாத,நீதி பேசாத ,நீதி இயங்காத நாடாகவே இலங்கை தற்போது காணப்படுகிறது.

அம்பாறை மாவட்டத்தில்  கல்முனையைச் சேர்ந்த மனித உரிமை சார்ந்து செயல்படுகின்ற சிவில் சமூக செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறுகின்ற அநீதிகளுக்காகவும் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காகவும் தமிழர் தேச அத்துமீறல்கள் மற்றும் ஏனைய அனைத்து மனித உரிமை மீறல்களுக்காகவும் நீதி கேட்டு குரல் கொடுத்துப் பல்வேறு செயல்பாட்டுத் தளங்களிலும் நின்று செயல்பட்டு வருகின்ற ஒரு செயற்பாட்டாளர்.

கடந்த 2023.10.12 ஆம் திகதி அவர் ஊரில் இல்லாத நேரம் அவரது வீட்டிற்கு சென்றிருந்த  பொலீஸார்  பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவின் (டி.ஐ.டி)  விசாரணை இருப்பதாகவும் அதற்கு அழைப்புக் கடிதம் தர வேண்டும் எனவும் கூறி அவரையும் அவரது குடும்பத்தாரையும் விசாரித்துள்ளதோடு  அவரது தம்பியின் தொழில் நிலையத்திற்கும் சென்று  விசாரணை அழைப்பை வழங்கியுள்ளனர்.

பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு  சிங்கள மொழியில் விசாரணை அழைப்பானை அனுப்பியுள்ளார்கள். இதற்கு முன்னரும் கூட இவருக்கு இது போன்று நான்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இறுதியாக 2023.01.25 ஆம் திகதி காலை 9:30 மணிக்கு இலக்கம் சி – 02 அரச விடுதி அம்பாறை எனும் விலாசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவின் அந்த நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் அங்கு இருந்த அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டு நான்கு மணித்தியாலங்களும் 48 நிமிடங்களும் நடந்ததோடு சுமார் 24 பக்க விசாரணை அறிக்கை அவர்களால் அவரிடம் இருந்து பெறப்பட்டு எழுதப்பட்டது .

அதன் பின்னர் 2023.04.15 ஆம் திகதியும் அவரது வீட்டிற்கு பெரியநீலாவணை பொலீஸ் நிலையத்தில் இருந்து இரண்டு பொலீஸ் அதிகாரிகள் சீருடையில் வருகை தந்து பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினர் மற்றும் தங்கள் உயர் அதிகாரிகள் தங்களை அனுப்பி  விசாரிக்கச் சொன்னதாகவும் கூறி விசாரணைக்கு உட்படுத்தி சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை அறிக்கை எழுதியிருந்தார்கள்.

அதனைத் தொடர்ந்து இப்போது இந்த அழைப்பு வழங்கப்பட்டிருக்கிறது இந்த அழைப்பு சிங்கள மொழியில் வழங்கப்பட்டு இருக்கிறது இதில்  சிங்களத்தில் தேசிய பாதுகாப்புக்கு இடையூறாக இருந்தமை தொடர்பாடல் செய்தமை போன்ற விடயங்கள் தொடர்பாக  விசாரிக்க வேண்டும் என்றும் அதற்கான விசாரணை பிரிவு 2023.10.16 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு இலக்கம் 149, 3வது மாடி கப்பிட்டல் பில்டிங்,கிருலப்பனை,கொழும்பு 05 எனும் முகவரியில் 01 ஆம் இலக்க விசாரணை அறைக்கு வருமாறும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

இவ்வாறு தொடர்ச்சியாக இதற்கு முன்னரும் கூட நான்கு முறை இவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள் விசாரணை செய்திருக்கிறார்கள் இதுபோன்று பல போலீஸ் விசாரணைகள் சி.ஐ.டி.விசாரணைகளையும் செய்திருக்கிறார்கள் அதனை தொடர்ந்து இப்போதும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள் விசாரணைக்கு என்று இவ்வாறு தொடர்ச்சியாக இந்த நாட்டிலே இருந்து செயற்படுகின்ற இவர்களைப் போன்ற செயற்பாட்டாளர்களுக்கு விசாரணை எனும் பெயரிலே தொடர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு கொண்டிருப்பதும் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்துக் கொண்டிருப்பதும் வேதனையான ஒரு விடயம் என்பதோடு இவ்வாறான விடயங்கள் தொடர்ச்சியாக இடம்பெறாமல் இருப்பதற்கு உரிய ஆவண செய்யப்பட வேண்டும் என இந்த உயரிய சபையைக் கேட்டுக்கொள்கின்றேன்.

மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு விசாரணை என்ற பெயரில் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்படும் போது இந்த நாட்டில் எவ்வாறு அச்சமில்லாமல் வாழ முடியும். தாமோதரம் பிரதீபனுக்கு வழங்கப்பட்ட அழைப்பானை கடிதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடிதங்களின் பிரதிகளை சபைக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த நாட்டில் தமிழ் இளைஞர்கள் செயற்பட முடியாத அளவுக்கு  பாதுகாப்பு தரப்பினரால் அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. இது முற்றிலும் விரோதமானது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.