தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பாக அமையும்! எஸ்.பி.திசாநாயக்க தெரிவிப்பு

நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை மேலும் அதிகரிப்பது  நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பாக அமையும்  என முன்னாள் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில், தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்குவது அரசாங்கத்தில் கொள்கையா? என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. எழுப்பிய  கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே எஸ்.பி.திசாநாயக்க  இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –

நான் அமைச்சராக பதவி வகித்த காலத்திலே நாட்டிலுள்ள அனைத்து தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் 25 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களை நாட்டில் அமைத்தாலும்  அவை எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெருமளவு பங்களிப்பை வழங்கும்  என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

அதனால் உயர் கல்விக்கான தனியார் பல்கலைக்கழகங்களை மேலும் நாட்டில் உருவாக்குவது மிகவும் அவசியமானது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். – என்றார்.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிடுகையில் –

சைட்டம் பல்கலைக்கழத்துக்கு அனுமதி வழங்கும்போது அப்போது எதிர்க்கட்சியில் இருந்த நீங்கள்தான் அதனை எதிர்த்தீர்கள்.

அத்துடன் நாம் எமது காலத்தில் உலக வங்கியின் நிதி உதவியைப் பெற்று தனியார் பல்கலைக்கழகங்களை கண்காணிப்பு செய்யும் திட்டம் ஒன்றை முன்னெடுத்தோம். அது தொடர்பில் சட்ட மூலம் தயாரிக்கப்பட்டது. எனினும் அது நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவில்லை. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.