சமாதானமான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க ஐ.நா. அமைப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும்! இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கோரிக்கை
பலஸ்தீனத்தில் இடம்பெறும் பேரழிவை நிறுத்தி உடனடியாக யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டு சமாதானமான தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் –
இந்த பிரேரணை மூலம் பலஸ்தீன பகுதியில் இடம்பெற்று வரும் பேரழிவு, அதன் மூலம் எம் போன்ற நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விரைவான யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டு சமாதானமான தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம். இந்த பிரேரணையிலும் அது குறிப்பிடப்பட்டுள்ளது.
நம் கண் முன்னே சர்வதேச ரீதியில் நடைபெறுகின்ற பெரும் வன்முறையை நாம் காண முடிகிறது. புதன்கிழமை ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இடம்பெற்றுள்ள விடயத்தை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.
அங்கு அமெரிக்க பிரதிநிதி ஒருவர் உரையாற்றும் போது மனித உரிமை, சர்வதேச சட்டங்கள் தொடர்பில் அவர் கருத்துக்களை முன்வைத்தார்.
அதன் போது அவரது இரட்டை வேடத்தை ஏனைய சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் நிராகரித்து செயற்பட்டதையும் காணமுடிந்தது.
அதேவேளை, இஸ்ரேல் தாக்குதல்களைக் கண்டித்து சமூக வலைத்தளங்கள் வெளியிடும் பல்வேறு தகவல்களையும் காண முடிகிறது.
விமான தாக்குதல்கள் நடத்தியும் வைத்தியசாலைகள் மீது தாக்குதல்களை நடத்தியும் மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். அவை உலகிற்கு தகவல்களைப் பகிர்ந்தளிக்கின்ற மேற்கத்திய ஏகாதிபத்திய வாதிகளுக்கு தகவல்களாக தெரியவில்லை என்பதையே எம்மால் காண முடிகிறது.
இப்போது மத்திய கிழக்கு நாடுகள் குறிப்பாக பலஸ்தீன பகுதியில் நடக்கும் வன்முறைகள் போன்று எமது நாடும் ஏகாதிபத்தியவாதிகளின் காலத்தில் இவ்வாறான அனுபவங்களை அனுபவித்துள்ளது என்பதை குறிப்பிட முடியும்.
அன்று சுதந்திரத்திற்காக போராடிய நம் மூதாதையர்கள், நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்தவர்கள். அவர்களையும் பயங்கரவாதிகளாகவே குறிப்பிட்டு அந்த ஏகாதிபத்தியவாதிகள் படுகொலை செய்தனர். அத்தகைய ஏகாதிபத்தியவாதிகள் இன்று அதையும் விட மோசமாக தமது கொள்கைகளை வகுத்து செயற்படுகின்றனர். அந்தக் கொடூரத்தையே இன்று மத்திய கிழக்கு நாடுகளில் காணமுடிகின்றது. – என்றார்.
கருத்துக்களேதுமில்லை