கிளிநொச்சி இராணுவத்தின் பூங்காவில் சமூகவிரோதச் செயற்பாடுகள் அதிகரிப்பு! நேரில் சென்று பார்வையிட்டார் அரச அதிபர்
கிளிநொச்சி நகரத்தில் அமைந்துள்ள இராணுவத்தினரின் பூங்காவில் பல்வேறு சமூக விரோதச் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என பல்வேறு தரப்பினரும் வைத்த கோரிக்கை அமைவாக மாவட்ட அரச அதிபர் குறித்த இடத்தை சென்று பார்வையிட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டத்தில் கல்வி அதிகாரிகள் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் உள்ளிட்டோரால் குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள பூங்காவில் தொடர்ச்சியாக சமூக விரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன எனவும் குறிப்பாக வயது குறைந்த சிறுமிகளை அழைத்து வந்து பல்வேறு குற்ற செயல்கள் இடம் பெறுகின்றன எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதனை அடுத்து குறித்த இடத்துக்கு பொலிஸாருடன் விஜயம் செய்த மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அங்கு நிலைமைகளை பார்வையிட்டுள்ளார்.
இதேநேரம் குறித்த பூங்கா வளாகத்தினுள் ஏராளமான கட்டடங்கள் எந்தவித பயன்பாடுகளும் அற்ற நிலையில் கதவுகளற்ற நிலையிலும் காணப்படுகின்றன. இவ்வாறு காணப்படுவதால் அங்கு பல்வேறு குற்றச் செயல்கள் இடம் பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் தென்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர், மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை