கணிதப் போட்டியில் 11 நாடுகளுடன் போட்டியிட்டு சாதனை படைத்த 7 வயது மாணவி

கொழும்பு, சைவ மங்கையர் வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி கற்கும் மாணவி மகேஷ்வரன் விவிஷனா தனியார் கல்வி நிறுவனமொன்று ஏற்பாடு செய்திருந்த 11 நாடுகள் பங்கேற்ற கணிதப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற இந்தக் கணித போட்டியில் இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு இராச்சியம், தன்சானியா, பஹரைன், பங்களாதேஷ், நியூசிலாந்து, கிரேஸ், சைப்ரஸ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இதில் கூட்டல், கழித்தலை உள்ளடக்கிய 80 கணக்குகளை 5 நிமிடங்களுக்குள் செய்து முடிக்கும் போட்டியில் ஏனைய நாட்டு மாணவர்களுடன் ம.விவிஷனாவும் பங்கேற்றிருந்தார். குறித்த 5 நிமிடங்களுக்குள் சுமார் 55 கணக்குகளை மனக்கணிதத்தில் செய்து அவர் சாதனையை பதிவு செய்துள்ளார்.

அது மாத்திரமின்றி இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து பல மாணவர்கள் பங்குபற்றிய கணிதப் போட்டியிலும் பங்குபற்றிய அவர் அதில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.

மகேஷ்வரன், தர்ஷினி தம்பதிகளின் புதல்வியான விவிஷனா கணிதத்தில் மாத்திரமின்றி ஏனைய பாடவிதான செயற்பாடுகளிலும், வரைதல் மற்றும் நடனமாடுதல் என்பவற்றிலும் திறமையானவராவார்.

தனது மகளின் சாதனை குறித்து கருத்து வெளியிட்ட விவிஷனாவின் தாயான தர்ஷினி மகேஷ்வரன், ‘எனது மூத்த மகன் ஒட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் கல்வி செயற்பாடுகளில் ஈடுபட முடியாது. இது எனக்கு ஒரு பாரிய மனக்குறையாகக் காணப்பட்டது. எனினும், எங்களின் கவலைகளை போக்கும் வகையில் எனது மகள் இந்த சாதனையை படைத்திருக்கின்றார். இதே போன்று அவர் கல்வியில் தொடர்ந்தும் சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பதே பெற்றோராக எமது விருப்பமும், வேண்டுதலுமாகும்.’ என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.