ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்போவதில்லை! ரோஹித அபேகுணவர்த்தன திட்டவட்டம்

2024 ஆம் ஆண்டுவரை மட்டும்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாம் அரசாங்கத்தை அமைத்திருந்தாலும், இது தற்காலிக அரசாங்கமொன்று தான். 2024 ஆம் ஆண்டுவரை மட்டும்தான் இந்த அரசாங்கம் இருக்கும்.

இதன் பின்னர் இவரைக் கொண்டுவருவோம்- அவரைக் கொண்டுவருவோம் என நாம் எந்த இடத்திலும் கூறவில்லை.

ஆனால், இந்த அரசாங்கத்தை நடுவில் உடைத்து, முட்டாள் தனமான வேலையை செய்யவும் நாம் தயாரில்லை.

ஜனாதிபதிக்கோ அமைச்சரவைக்கோ நாட்டை வழிநடத்த முடியாவிட்டால், உடனடியாகத் தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும்.

அல்லாவிட்டால் நாட்டில் காட்டுச் சட்டம் வந்துவிடும். மக்கள் தான் அரசாங்கத்தைத் தீர்மானிக்க வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மனதில் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தான் உள்ளார்.

அரசாங்கமானது, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காக நாட்டு மக்களைத் துன்பத்திற்குள் தள்ளியுள்ளது.

மக்கள் மரணித்த பின்னர், ஐ.எம்.எப்.இன் கடனுதவி கிடைத்தும் பலனில்லாமல் போய்விடும்.

எனவே, அரசாங்கம் இதுதொடர்பாகவும் சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். – என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.