இஸ்ரேல் – பலஸ்தீன விவகாரத்தில் ‘இரு அரசு’ தீர்வுக்கு ஆதரவு – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

ஐ.நா பொதுச்சபையில் காஸா தொடர்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கை வாக்களித்திருப்பதாகவும், சமாதானத்துடன்கூடிய ‘இரு அரசு’ தீர்வை தாம் ஆதரிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஹமால் அமைப்பினால் கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி தென் இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் மிகத்தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் காஸா மீது இஸ்ரேலியப்படையினர் தொடர்ச்சியாக நடத்திவரும் தாக்குதல்களில் இதுவரையில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த 26 ஆம் திகதி கூடிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஜோர்டானால் முன்மொழியப்பட்ட காஸாவில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானம் 120 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு மேற்குறிப்பிட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளில் ரஷ்யா, சீனா, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகளுடன் இலங்கையும் உள்ளடங்குகின்றது.

அதன்படி இவ்விடயம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் (டுவிட்டர்) பதிவொன்றைச் செய்திருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் காஸா தொடர்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கை வாக்களித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி ‘பொதுமக்களைப் பாதுகாப்பதும், பணயக்கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டிருப்போரை விடுதலை செய்வதும், மனிதாபிமான நிலைவரத்தை உறுதிசெய்வதும், வன்முறைகள் தீவிரமடைவதைத் தடுப்பதுமே இலங்கையின் முன்னுரிமைக்குரிய விடயங்களாகும்’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இவ்விவகாரத்தில் சமாதானத்துடன்கூடிய ‘இரு அரசு’ தீர்வுக்கு இலங்கை ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இப்பதிவை மேற்கோள்காட்டி தமது ‘எக்ஸ்’ தளங்களில் பதிவிட்டுள்ள சில புத்திஜீவிகள், சர்வதேச விவகாரத்தில் இலங்கையின் கொள்கை இவ்வாறிருக்கின்ற போதிலும், உள்நாட்டில் தமிழர்கள் விவகாரத்தில் இக்கொள்கை பின்பற்றப்படாமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.