பலமான பொருளாதார ஆண்டாக 2024 ஐ மாற்றுவதே எதிர்பார்ப்பு! நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கருத்து
2024 ஆம் ஆண்டினை பொருளாதார ரீதியில் வலுவான ஆண்டாக மாற்றிக்கொள்ள, 1.8 வீத பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதே அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அதேபோல், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள், வறுமையான மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள், சிறிய மற்றும் மத்திய தர தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க –
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் சமர்ப்பித்த 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமே மிகவும் சவால் மிக்க வரவு செலவுத் திட்டமாகும். அதில் இருந்து நாம் பெற்றுக்கொண்ட நிலையான தன்மைமை அடிப்படையாகக் கொண்டே, 2024 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், நாம் எதிர்பார்க்கும் பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணிக்கவும் அவசியமான பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
நாம் 2023 ஆம் ஆண்டு முன்வைத்த வரவு செலவுத்திட்டத்திற்கு அடிப்படையாகக் கொண்ட விடயங்கள் மற்றும் 2024 ஆம் ஆண்டு முன்வைத்த வரவு செலவுத்திட்டத்துக்கு அடிப்படையாகக் கொண்ட விடயங்கள் குறித்தும் நாம் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டோம்.
ஆனால், 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டமொன்றை முன்வைக்க முடியுமாகுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் காணப்பட்டது. அவ்வாறான சூழ்நிலையில், நாம் மேற்கொண்ட பணிகள் சிறப்பாக அமைந்ததன் காரணமாகவே முழுமையாக இல்லாவிட்டாலும் கூட நாம் இன்று குறிப்பிடத்தக்க அளவில் பொருளாதார ரீதியில் ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளோம். இந்த ஸ்திரத்தன்மையைத் தாண்டிய ஒரு வரவு செலவுத்திட்டமொன்று குறித்தே நாம் தற்போது கதைக்கின்றோம்.
2024 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில், அரச வருமானம் 4127 பில்லியன் ரூபாவாகவும் அரச செலவினங்கள் 6978 பில்லியன் ரூபாவாகவும் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை 2851 பில்லியன் ரூபா என்ற பிரதான இலக்கங்களுடனேயே நாம் இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம்.
இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு அடிப்படையாக அமைந்த பிரதான விடயங்கள் குறித்து குறிப்பிடுவதாயின், நாம் எவ்வகையான இலக்குகளுடன் பயணிக்க வேண்டியிருக்கின்றது என்பது பற்றி இந்த வருடத்தின் எமது தேசிய கடன் மறுசீரமைப்பு நடடிக்கைகளின்போது நாம் தெளிவுபடுத்திய விடயங்கள் உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கின்றேன்.
நூற்றுக்கு, நூற்றி இருபத்தி எட்டாக இருந்த கடன் சுமையை, நூற்றுக்கு தொன்னூற்றி ஐந்தாகக் குறைத்தல் மற்றும் 34.6 வீத நிதித் தேவையை 13 வீதம் வரை குறைத்தல், வெளிநாட்டு கடன் நிதியை இன்று நிலவும் 9.4மூ இல் இருந்து 4.5 வீதம் வரை குறைத்தல் போன்ற 03 காரணங்களின் அடிப்படையிலேயே 2023 மற்றும் 2024 வரவு செலவுத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த இலக்கங்களை அடைந்துகொள்ளவே, சவால் மிக்க இக்காலப்பகுதியில் நாம் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கின்றோம்.
மேலும், 2024 ஆம் ஆண்டு வரவு – செலவுத்திட்டத்தில், இந்தப் பொருளாதார நெருக்கடியின்போது, அவதானம் செலுத்தப்பட வேண்டிய மற்றும் கடந்த காலங்களில் அனைவரும் கருத்துத் தெரிவித்த அனைத்துத் துறைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி, அவர்களை மீண்டும் கட்டியெழுப்ப அவசியமான பொருளாதார உந்துதலை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 2024 ஆம் ஆண்டைப் பொருளாதார ரீதியில் வலுவான ஆண்டாக மாற்றிக்கொள்ள, 1.8 வீத பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதே அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும்.
இதன்போது, எமது கடன் மறுசீரமைப்பு மிக முக்கியமாகும். கடன் மறுசீரமைப்பு இன்றி கடன் நிலைபேற்றுத் தன்மையை இந்நாட்டில் ஏற்படுத்த முடியாது. நாம் அதனை நோக்கிப் பயணிக்க உள்நாட்டு கடன் மறுசீரமைப்புப் பணிகளை நிறைவு செய்தோம்.
அதன் பின்னர் வெளிநாட்டு இருதரப்பு கடன் மறுசீரமைப்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். அதற்காக எமக்கு சர்வதேச கடன் வழங்குநர்கள் ஆதரவு வழங்கி வருகின்றார்கள். இந்த வருட இறுதிக்குள் எமது கடன் மறுசீரமைப்புப் பணிகளை நிறைவு செய்து, நாம் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு, எமக்கு மீண்டும் இயல்பான பொருளாதார நடவடிக்கைகளைத் தொடரக் கூடிய சூழ்நிலையை நாட்டில் ஏற்படுத்த முடியும். அதற்காக வெற்றிகரமான பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம்.
நாம் 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம். அவர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 10,000 ரூபாவால் அதிகரித்தோம். அதேபோன்று அஸ்வெசும பயனாளர்கள், சிறுநீரக நோயாளிகள், முதியோர் மற்றும் அங்கவீனர்கள் குறித்தும் அவதானம் செலுத்தியுள்ளோம். அதேபோன்று, சிறிய மற்றும் மத்திய தர தொழில்முயற்சியாளர்கள் குறித்தும் அவதானம் செலுத்தியுள்ளோம். இதற்காக 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், காணி உரிமை மற்றும் தொடர்மாடிக் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு அதன் உரிமையை வழங்குவது தொடர்பிலும் ஜனாதிபதி இந்த வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழிந்துள்ளார். கல்வி மறுசீரமைப்பு உட்பட பல்வேறு மறுசீரமைப்புப் பணிகள் குறித்தும் இந்த வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளன. கடன் பெறும் வரையரை அதிகரிக்கப்பட்டிருப்பது, மேலதிக கடன் பெறுவதற்கு அன்றி கடன் மறுசீரமைப்பு பணிகளின்போது எமக்கு அவசியமான நிதி நிலைகளைப் பேணிக்கொள்வதற்காகும். அதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி அவசியமாகும்.
குறிப்பாக, இந்த நடவடிக்கைகளின் மூலம் 2024 ஆம் ஆண்டை பலமான பொருளாதார ஆண்டாக மாற்றுவதே எமது எதிர்பார்ப்பாகும். பொருளாதார நடவடிக்கைகளை இயல்பாக மேற்கொள்ள ஆரம்பிக்கும் வருடமாக, 2024 ஆம் ஆண்டு அமையும் என்பது எமது நம்பிக்கையாகும். – என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை