இலங்கை மின்சாரசபை நுகர்வோரிடம் பல மடங்கு சூறையாடுகிறது – உதய கம்மன்பில
இலங்கை மின்சாரசபை மின்சாரத்தை உட்பத்தி செய்ய செலவிடும் தொகையைவிட பலமடங்கு அதிகமாகவே நுகர்வோருக்கு மின்சாரத்தை விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த காலத்தில் மின்சார சபைக்கு ஏற்பட்ட நடத்தை ஈட்டிக்கொள்வதற்கே செயற்பட்டு வருகிறது என உதய கம்பன்பில தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு அண்மித்திருக்கும் நீர் நிலைகள் நிரம்பி வழிந்தோடுவதாக தற்போது எங்களுக்கு அறியக்கிடைக்கிறது.
இந்த விடயத்தை நாங்கள் ஒக்டோபர் 20ஆம் திகதி மின்சார கட்டணம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்போது தெரிவித்தோம். ஜூன், ஜூலை மாதங்களில் வரட்சி ஏற்பட்டது உண்மை.
ஆனால் ஆகஸ்ட் நடுப்பகுதியில் இருந்து பாரியளவில் மழை பெய்யும். வரட்சியான காலத்தில் மின் உற்பத்தி செய்ய ஏற்பட்ட நட்டத்தை , இந்த காலப்பகுதியில் பெய்யும் மழையின் மூலம் ஈடு செய்ய முடியும். அதனால் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என நாங்கள் தெரிவித்து வந்தோம்.
ஆனால் எமது கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் அரசாங்கம் ஒக்டோபர் 20முதல் பாரியளவில் மின்சார கட்டணத்தை அதிகரித்தது. இந்த மின் கட்டண அதிகரிப்பினால் ஏற்பட்டிருக்கும் தற்போதைய நிலை என்ன? என கேட்கிறோம்.
அத்துடன் நேற்று முன்தினம் நாட்டின் மின் உற்பத்தியை பார்த்தால், நாட்டின் மொத்த மின் தேவையில் இலங்கை மின்சாரசபையில் நீர் மின் உற்பத்தி மூலம் நூற்றுக்கு 64 வீதம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது.
அதேபோன்று நேற்று முன்தினம் மொத்த மின்சார உற்பத்திக்கு 82வீதம் புதுப்பிக்கதக்க சக்தி வளங்கள் பங்களிப்பு செய்திருக்கின்றன. ஆனால் எரிபொருளால் செயற்படும் அனல் மின் உற்பத்தி மூலம் நூற்றுக்கு 3,6 வீத பங்களிப்பே கிடைத்துள்ளது.
அத்துடன் இலங்கை மின்சார சபையினால் நீர் மின் உற்பத்தி செய்வதற்கு அனைத்து செலவுகளையும் உள்ளடக்கினாலும் ஒரு அலகுக்கு 3,50 சதமே செலவாகிறது. ஆனால் அதனை எமக்கு விற்பனை செய்யும்போது , எமது ஆரம்ப 60 அலகுவரை 36 ரூபா அறவிடப்படுகிறது.
60க்கும் 90க்கும் இடையில் 41 ரூபா அறவிடப்படுகிறது. அதன் பிரகாரம் 11, 12 மடங்கு அதிகமாகவே எமக்கு மின்சாரம் விற்பனை செய்யப்படுகிறது. அப்படியானால் மின்சார சபை பாரிய சூரையாடலையே மேற்கொள்கிறது.
அத்துடன் மின்சாரசபை மின் உற்பத்திக்காக சாதாரண லாபம் ஈட்டிக்கொள்வதாக இருந்தால் அதற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை.
ஆனால் கடந்த காலங்களில் மின்சாரசபைக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈட்டிக்கொள்ளவே தற்போது மின்சாரசபை நடவடிக்கை எடுத்திருக்கிறது.
அதற்காகவே பாரியளவிலான மின்சார கட்டண அதிகரிப்புக்கு காரணமாகும். மின்சார கட்டண அதிகரிப்பால் மின்சார பாவனையாளர்களில் 6இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. எதிர்வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம். அதனால் இந்த நிலை தொடர்ந்தால் மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்க மாட்டார்கள் என தெரிவிக்க முடியாது என்றார்.
கருத்துக்களேதுமில்லை